பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

53


 யண்மை முன்மைகளைச் சுட்டுவதால், சுட்டெழுத்துகள் எனப்பட்டன. இவ் வியல்பைத் தமிழிலும் திரவிட மொழிகளிலுந்தான் காணவியலும்.

இம் முச்சுட்டெழுத்துகளினின்றே, ஆரியமொழிச் சுட்டுச் சொற்களெல்லாந் தோன்றியுள்ளன. ஆயின், அம் மொழிகள் திரி மொழிகளாதலின், அவற்றின், சுட்டுச்சொற்கள் இடத்தையும் பொருளையும் இடம் மாறியுஞ் சுட்டுகின்றன.

எ-டு: ஆங்கிலம் - it = அது, இது
   இலத்தீனம் is = அவன், அவள், அது
   சமற்கிருதம் - அத்ர = இங்கே, அத்ய = இன்றைக்கு, அதுநா = இப்போது.

இனி, சுட்டெழுத்துகள் ஆரியமொழிகளில் வேறெழுத் தாகமாறியும் உள்ளன.

எ-டு: ஆங்கிலம் - there = அங்கே, so = அப்படி
   இலத்தீனம் - hoc = இது
   சமற்கிருதம் - ஏதத் = இது.

உகரச் சுட்டு, லகர மெய்யொடு சேர்ந்து உல் என்னும் மூல வேரையும், கசதநபம என்னும் சொன்முதல் மெய்களொடு கூடிக் குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் அறு சினைவேர்களையும், அதன்பின் லகரவீறு வேறெழுத்துகளாக மாறும் முதலடியையும் அறு வழியடிகளையும், தோற்றுவித்துள்ளது. இவ் வேர்களினின்றும், அடிகளினின்றும், தமிழ்ச் சொற்களுள் முக்காற்பங்கிற்கு மேற்பட்டவை தோன்றியுள்ளன.

எ-டு: உரு. உல் - உர் உரு.

உருத்தல் = தோன்றுதல். உரு தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள், தனிப்பொருள், உடம்பு, பாட்டு, மனப்பாடம். உருப்படி தனிப்பொருள், நிறைவான பொருள். உரு உருவு = தோற்றம், வடிவம். உருவு உருவம் வடிவம், வடிவுடைப் பொருள், உருவப்படம், படிமை, சிலை. உருவு உருபு = வேற்றுமை வடிவமான சொல் அல்லது அசை. உருச்செய்தல், உருப்போடுதல், உருவடித்தல், உருவேற்றுதல் என்பன, மந்திரத்தின் அல்லது பாட்டின் அல்லது பாடத்தின் வடிவை அப்படியே மனத்திற் பதித்தலாகிய மனப் பாடஞ் செய்தலைக் குறிக்கும். உருவம் வ. ரூப. இச் சொல் இருக்கு வேதத்திலும் உள்ளது. உருபா (ரூபா) என்னுஞ் சொல்லும் இதினின்று திரிந்ததே. அரசன், தெய்வம், தோற்றரவு, சின்னம் முதலியவற்றின் உருவம் பொறித்த காசு உருபா. (உருவு - உருவா, உருபு = உருபா)