பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ் இலக்கிய வரலாறு



தமிழறியாத வடவரும் தமிழ்ப்பகைவரான ஆரியரும் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகளும் இந்திய நாகரிகம் ஆரியரது என்பர். நடுநிலையாளர்போல் நடிக்கும் ஒருசில வையாபுரிகள், அது ஆரியரும் திரவிடரும் அல்லது பல்வேறு இனத்தார் கூடிவளர்த்த கூட்டு நாகரிகம் என்பர். உண்மையில், அது குமரிநாட்டுத் தமிழன் வளர்த்த தனிநாகரிகமே. தமிழர் என்பார் கோடிக்கணக்கான ஒரு பேரினத்தார் என்றும், ஆரியர் என்பார் விரல்விட்டெண்ணத்தக்க ஒருசிறு கூட்டமான ஆரியப் பூசாரியரே யென்றும், வேறுபாடறிதல் வேண்டும்.

இரவில் மதியொளி எத்துணை விளக்கமாயிருப்பினும் கதிரொளியின் மறுநிழலாகவே யிருப்பது போன்று, இற்றைச் சமற்கிருத இலக்கியம் எத்துணை விரிவுபட்டிருப்பினும் தமிழ் மூலத்தின் பெருக்கமே என்பதை உணர்தல் வேண்டும்.

ஆரிய இலக்கியம் எழுதப்பட்டுள்ள சமற்கிருதமும், அதற்கு மூலமான வேதமொழியும், வேதமொழிக்கு மூலமான மேலை யாரியக் கிளையும், தமிழின் திரிபாயிருக்கும்போது, இந்திய நாகரிகம் ஆரியம் என்பது, பேரனே பாட்டனைப் பெற்றான் என்பதொத்ததே.

2. தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை

தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. ஆங்கிலர் ஆட்சி நீக்கம் வேறு; விடுதலை வேறு; விடுதலை பெற்றதாகக் கருதும் தமிழன், ஆரிய அடிமைத்தனத்தில் ஆழ மூழ்கித் தமிழறிவையும் வரலாற்றறிவையும் பகுத்தறிவையும் இழந்திருப்பதால், தன் ஆரியத் தலைவன் கற்பித்ததையே தானுஞ் சொல்லிக்கொண்டிருக்கின்றான்.

ஒருவனது இன்பநுகர்ச்சி அல்லது மகிழ்ச்சிப்பேறு, கீழ் வருமாறு அறுவகைப்படும்:

(1) உண்மை நுகர்ச்சியின்பம் (Real enjoyment)

இது என்றும் உண்மையென்று தோன்றும் அறிவொடு கூடிய ஐம்புல அல்லது அறுபுல நுகர்ச்சி யின்பம்.

(2) கருதுகோளின்பம் (Fancied pleasure)

இது தாழ்ந்ததை உயர்ந்ததென்று கருதிக்கொண்டு இன்புற்றுப் பின்னர் உண்மையறிந்து, வருந்துதற்கேதுவான இன்பம்.

{{larger|(3) தொழுவாட்டின்பம் (Habituated pleasure)

இது கள்ளும் புகையிலையும் போன்ற பொருளையுண்டு அடிப்பட்ட பழக்கத்தினால் நுகரும் இன்பம்.