பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

59


(4) பரிவின்பம் (Sympathetic pleasure)

இது தன் உறவினன் அல்லது நாட்டான் அல்லது மதத்தான் அல்லது மொழியான் அல்லது கட்சியான் பெற்ற இன்பத்தை, தனதுமாகக் கருதும் இன்பம்.

(5) மனமாற்றின்பம் (Indoctrinated pleasure)

இது ஒருவருடைய கற்பிப்புத் திறத்தினால் மனப்பான்மை மாற்றப்பட்டவன் உணரும் இன்பம்.

(6) கட்டாய இன்ப அறிக்கை (Coerced statement of pleasure)

இது சொல்லளவாக மட்டுமுள்ள இன்பம்; கட்டாயத்தால் நிகழ்வது. கட்டாயம் இருவகையில் நிகழும். ஒன்று தண்டனை யச்சம்; இன்னொன்று மந்திர மருந்து துயில் மனவசியம்.

பேராயத் தமிழர் விடுதலையுணர்ச்சி, பரிவினால் அல்லது மனமாற்றினால் விளைந்ததே. வ.உ.சி., திரு.வி.க. முதலிய தமிழறிஞரும், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமைகளை அறிந்தவரல்லார். வ.உ.சி. கப்பலோட்டியதைத் தடுத்தது ஆங்கிலராட்சியால் விளைந்த சிறு தீங்கே. ஆயின், உலகில் முதன்முதற் கலம்புணர்த்து,

“நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன்” (புறம். 66)

தமிழன் என்பதை மறைத்து, நாவாய் என்னும் கலப்பெயரையும் தமிழென வழங்கவிடாது நௌ என்னும் வடசொற் றிரிபெனத் தடுக்கும் பிராமணியம், பிரித்தானியத்தினுங் கொடியதென்பதை, அவர் அறிந்தாரில்லை.

ஆங்கிலர் வருமுன் தமிழ்நாட்டிற் பிராமணியம் எவ்வளவு ஆழ்ந்து வேரூன்றியிருந்ததென்பதையும், தமிழன் எங்ஙனம் நாய்போல் நடத்தப்பட்டான் என்பதையும் ஆங்கிலராட்சி யின்றேல் இந்தியா ஓராட்சிக்குள் வந்திரா தென்பதையும், அவர் அறிந்தும் உணர்ந்தும் இலர். பண்டைப் பிராமணியக் காலத்தில், திருவாங்கூர் அரசர் போன்றார் ஆட்சியில், இந்தியரே இந்தியாவில் இருப்புப் பாதை அமைத்திருப்பின், தொடர்வண்டி வகுப்புகள் 1ஆவது 2ஆவது, 3ஆவது என்றிராது, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்றே ஐவகுப்பாக அமைந்திருக்கும்.

தமிழ் நலத்தையும் தமிழர் நலத்தையும் கருதாது தந்நலத்தை மட்டுங் கருதுபவரே, தம் பேதைத்தனத்தையும் பேடித்தனத்தையும்