பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழ் இலக்கிய வரலாறு


மறைத்து, நடுநிலையும் பரந்தநோக்கும் உள்ளவர்போல் நடித்து, இந்தியரெல்லாரும் ஓரினமென்றும் வகுப்பு வேற்றுமை கூடாதென்றும், விளம்பரச் சிறுவர் கத்திச் செல்வதுபோற் சொல்லியும் எழுதியும் வருவர்.

ஆங்கிலராட்சிக் காலத்தும், தேவாரப் பாடகர் குழாம் பிராமணத் தெரு வழியே செல்லக்கூடாதென்றும், சில பிராமண உண்டிச் சாலைகளில் தமிழர்க்கு எடுசாப்பாடும் இல்லையென்றும், அரசினர் நடத்தும் மாணவர் விடுதிகளில் பிராமணன் சமைத்த வுண்டியையே பிராமண மாணவரும் தமிழ மாணவரும் வெவ்வேறிடத்தில் உண்ண வேண்டுமென்றும், தமிழர்க்கு நூற்றுமேனி நாற்பத்தைந்து விழுக்காடே அரசியல் அலுவல் அளிக்கவேண்டுமென்றும், தமிழர் தம் அறிவாற்றலால் இம்மையில் எத்துணை முன்னேறினும் தம் பிறப்பை மறுமையில்தான் மாற்றமுடியு மென்றும், கட்டுப்பாடுங் கோட்பாடும் இருந்ததை நோக்கின், மேலை நாகரிகம் புகாப் பண்டைக்காலத்தில் இந்தியத் தொல்லின மக்கள் வாழ்வு எத்துணை இழிந்ததும் இரங்கத்தக்கதுமாயிருந் திருத்தல் வேண்டுமென்பதை, எளிதாய் உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

ஆங்கிலன் தமிழனுக்கு மீட்பனாய் வந்தான் என்பதை எவரும் மறுக்கமுடியாது. அவனாட்சியால் பிராமணியம் ஓரளவே நீங்கிற்று. அவன் நீங்கின பின்னும் பிராமணியம் பேரளவாயிருப்பதுடன், இந்தி மணியம் என்னும் மேலுமொரு புத்தடிமைத்தனத்திற்கு இடந் தந்துள்ளது.

பேராயத் தமிழர் இந்தியா ஒரு நாடென மயங்கிக்கொண்டு, இந்திப் புத்தடிமைத்தனத்தையும் வரவேற்கின்றனர். இந்தியா பரப்பளவில் இரசியா நீங்கின ஐரோப்பா என்று, முன்னரே இராகொசின் தம் ‘வேத இந்தியா’ (Vedic India) என்னும் நூலிற் கூறியுள்ளார். இனவகைகளை நோக்கின், இந்தியா ஐரோப்பாவினும் ஆப்பிரிக்காவை ஒத்ததெனத் தெரியவரும். இத்தாலியர், பிரெஞ்சியர், இசுப்பானியர், போர்த்துக்கீசியர் முதலியோர், ஓரின மொழிகளைப் பேசும் நாட்டினத்தார். ஆங்கிலர், செருமானியர், ஆலந்தர், தேனியர் முதலியோர் ஓரின மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத்தார். இரசியர், போலந்தர், செக்கோசுலோவக்கியர் முதலியோர் ஓரின மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத்தார். கிரேக்கர் ஒருமொழி பேசும் தனிநாட்டினத்தார். இவரெல்லாருஞ் சேர்ந்து ஆரியம் என்னும் ஒரு பெருங் குடும்பத்தின் கிளைகளைப் பேசும் ஒரே பேரினத்தர். பாசுக்கர், அங்கேரியர், இலாப்பியர், துருக்கியர் முதலியோர் ஆரியமல்லாத வேறு மொழிகளைப் பேசும்