பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

61


வெவ்வேறு நாட்டினத்தார்; இவரும் ஆரியருஞ் சேர்ந்து ஐரோப்பியர் என்னும் தனிக்கண்டத்தார்.

இங்ஙனமே, தமிழர் ஒரு தனி நாட்டினத்தார். தெலுங்கர், கன்னடியர், மலையாளியர் முதலியோர் தமிழுக்கினமான திரவிட மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத்தார். தமிழருந் திரவிடருஞ் சேர்ந்து தென்மொழியார் என்னும் பேரினத்தார். ஒட்டரர், மராட்டியர், குசராத்தியர், இராசத்தானியர், இந்தியார், பஞ்சாபியர், வங்காளர் முதலியோர் ஆரியமுந் திரவிடமுங் கலந்த வெவ்வேறு மொழிகளைப் பேசும் வெவ்வேறு நாட்டினத்தார். முண்டாமொழிகளைப் பேசுபவர் ஓரின மொழிகளைப் பேசும் வெவ்வேறு மக்கள் வகுப்பார். இவரெல்லாருஞ் சேர்ந்து இந்தியர் என்னும் ஓர் உட்கண்டத்தார். இந்தியரின் நிறமுக வடிவ ஊணுடை நடை பழக்கவழக்க மணவுறவு வேறுபாடுகளை நோக்கின், இந்தியா ஆப்பிரிக்காவையும் ஒக்கும். தமக்கென ஒரு நாடில்லாது இந்தியா முழுவதும் பரவி இந்தியரையெல்லாம் அடிப்படுத்தி, சமற்கிருத வழிபாட்டை எங்கும் புகுத்தியிருப்பதால், தந்நலமாகவும் தமக்கரணாகவும் இந்தியா ஒரு நாடென்னும் பிராமணக் கூற்றை மேற்கொண்டே, பேராயத் தமிழரும் அடிப்படையில் தம்மைத் தமிழ ரென்றுணராது இந்தியர் எனச் சொல்லிப் பெருமை கொள்கின்றனர். இது ஒரு தமிழன் தன்னை ஆசியன் என்று சொல்லிப் பெருமைப்படுவ தொத்ததே; ஆட்சி வகையில் மட்டும் வேறுபட்டதாகும்.

வரலாற்றையும் தமிழ நாகரிகப் பண்பாட்டையும் நோக்கின், பிராமணியத்தையும், இந்திமணியத்தையும் எதிர்ப்பாரே உண்மையான நாட்டுப் பற்றாளர். அவ்விரண்டையும் ஏற்பவர் நாட்டை காட்டிக் கொடுக்கும் இரண்டகரே (துரோகியரே). தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், பேராயத்தாரின் ஆங்கிலராட்சி நீக்கப் போராட்ட மறவரினும், இந்தியெதிர்ப்புப் போராட்ட மறவரே சிறந்தவருந் தெளிந்தவருமாவர்.

பிராமணர் நிலத்தேவரென்றும், சமற்கிருதம் தேவமொழி யென்றும், நிற அடிப்படையிலும் மொழியடைப்படையிலும் பிராமணியம் அடிநாளிற் புகுத்தப்பட்டது. இன்று பிராமணர் வெண்ணிறத்தை இழந்துவிட்டதனாலும் தமிழரின் கண் திறந்துவிட்டதனாலும், அறிவியற்கதிர் இருள் நீக்குவதனாலும், நிற அடிப்படையில் பிராமணர் தம் மேம்பாட்டை நிலைநிறுத்த முடியாமல், மொழியடிப்படையில் முயல்கின்றனர்; தமிழன் பிராமணனுக்கு அடிமைப்பட்டிருப்பது போன்றே, தமிழும் சமற்கிருதத்திற்கு அடிமைப்பட்டுள்ளது. அப் பிணிப்பினின்று தமிழை மீட்பின், தமிழனும் மீட்பையடைவான். ஆதலால், தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை என அறிக.