பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

63


யாது. பிராமணர் தமக்கென நாடும், மொழியுமின்றி, இந்தியாவிற் பல நாடுகளிலுஞ் சென்று தங்கி அவ்வந்நாட்டு மொழியைத் தத்தம் தாய் மொழியாகக் கொண்டு வாழ்கின்றனர். இதனால், வேதம் ஓதுவதிலும் சமற்கிருதத்தை வளர்ப்பதிலும் பிராமண வுயர்வைக் காத்துக் கொள்வதிலும் ஒன்றுபட்டிருப்பினும், தாய்மொழி வகையிலும் வாழிட வகையிலும் வேறுபட்டுள்ளனர். தாய்மொழியைப் பேசாதும் பேணாதும் ஒருவன் வாழவும், அதிற் புலமை பெறாது ஒருவன் உயரவும் முடியாதாகையால், தமிழ்நாட்டுப் பிராமணர் தமிழ்ப் புலமை பெறுவதும் சிறந்த சிறந்த தமிழ்நூலியற்றுவதும் அடிப்படையில் தந்நல வினையே என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆதலால், கடமையை அறமாகக் கூறுதல் பொருந்தாது. இனி, பிராமணர் எத்துணைப் பெரும்புலவரேனும், அவருக்கு முதற்பற்று சமற்கிருதத்தின்மீதே யுள்ளது. அதனால், சமற்கிருதத்தைத் தலைமையாகவும் தமிழைக் கீழ்த்துணையாகவுமே கொள்கின்றனர்; இயன்றவிடமெல்லாம் தமிழ்ச் சொற்கட்குத் தலைமாறாகச் சமற்கிருதச் சொற்களையே ஆள்கின்றனர். அதோடு, ஆங்கிலம் முதலிய அயன்மொழிச் சொற்களை மொழி பெயர்ப்பதுமில்லை. இது தனித்தமிழ் மீதுள்ள வெறுப்பையே காட்டுகின்றது. சமற்கிருதச் சொற்களையும் எழுத்துப் பெயர்க்காது வடவெழுத்தொடு தற்சம வடிவில் எழுதுவதே அவர் வழக்கம்.

வடமொழி தேவமொழியென்னுங் காலம் மலையேறி விட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால், வடமொழியைத் தேவமொழி யெனின், தமிழைத் தேவதேவ மொழியெனல் வேண்டும். ஆகவே, பிராமணர் பழைய செருக்கை விட்டுவிட்டுத் தமிழரொடு உடன்பிறந்தார்போல் ஒன்றி வாழ்வதே தக்கது. அதனாற் பகைமை நீங்கும். பிராமணர் முதலமைச்சருமாவர். தலைமைப் பதவிகளை அவர் தாங்கத் தடையிராது. தகுதிபற்றி வேலை கிடைக்குமாதலால், பெருந்தொகையான பிராமணர் அரசியல் அலுவல்களைப் பெறவும் வாய்ப்பிருக்கும். பிராமண வுண்டிச்சாலைகள் பற்றியோ, பிராமணர் கோயிற் போற்றியர் (அர்ச்சகர்) ஆதல் பற்றியோ, எதிர்ப்பிருக்காது.

தமிழ்நாட்டுப் பிராமணர், இன்று தமிழ்நாட்டாரும் தமிழ் பேசுவோருமா யிருக்கின்றனரே யன்றித் தமிழராயில்லை. பரிதிமாற் கலைஞன்போல் தமிழை ஒரே உண்மையான தாய்மொழியாகக் கொள்ளின், முழுவுரிமைத் தமிழராவர். அதுவரை அயலார் போன்றே கருதப்படுவர்.

பாரதக் காலத்தையோ இராமாயணக் காலத்தையோ ஆரியர் வந்த காலத்தையோ, பல்லாயிர வாண்டு முன்தள்ளிப் போட்டு