பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ் இலக்கிய வரலாறு


விடுவதனால் ஒரு பயனும் விளையாது, தம்பி அகவை பதிவேட்டிற் குறித்திருப்பதினும் மிகுந்த தென்று கணிக்கப்படின், அவனுக்குப் பல்லாண்டு முன் பிறந்த தமையன் அகவை தானே மிகுதலையும், அதனால் தந்தை பாட்டன் முதலிய முன்னோரகவையும் தாமே மிகுதலையும் காண்க. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழியாதலால், எந்த வானநூற் கணிப்பும் அதன் முதன்மையைக் கடுகளவுந் தாக்கா தென்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க.

இனி, பம்மல் சம்பந்த முதலியாரின் தந்தையார் திருமணம் பொருத்தமில்லதெனக் கணித்த அற்றைச் சென்னைத் தலைமைக் கணியர் தவற்றையும், கோவலன் புகாரினின்று மதுரை சென்ற காலத்தைக் கி.பி. 8ஆம் நூற்றாண்டென்று சாமிக்கண்ணுப் பிள்ளை தவறாகக் கணித்ததை, கி.பி. 2ஆம் நூற்றாண்டென்று இராமச்சந்திர தீட்சிதர் திருத்தியதையும், நோக்குக.

ஊமைப்போர்

குலவியல், மொழியியல், மதவியல், பொருளியல் ஆகிய நால் துறையிலும், பிராமணர்க்குந் தமிழர்க்கும் இடையே நடந்துவரும் ஊமைப்போர் வரவர வலுத்துவருவது, இருவகுப்பாரும் அறிந்ததே. பிராமணர் தம் முன்னோரின் ஏமாற்றுக்கலையை அறவே விட்டு விட்டுத் தமிழருடன் ஒன்றி, உண்மையான தமிழராக மாறி நாட்டிற்கும் மொழிக்கும் உண்மையாக ஒழுகி வருவதே அறிவுடைமையாம்.

நெல்லை அருளூண் வெள்ளாளரும் வெள்ளாண் முதலியாரும் வெள்ளாண் செட்டியாரும் அவர்போன்ற பிறரும், பிராமணர்க்கு எவ்வகையிலும் இம்மியுந் தாழ்ந்தவரல்லர். குலத்தில் ஒன்றாவிடினும் மொழியில் ஒன்றுவது இன்றியமையாததாம்.

4. தமிழர் ஒற்றுமை

எந்த நாடும் ஒற்றுமையின்றேல் முன்னேறாது ஒழிந்துபோம். நயன்மைக் கட்சிக் கொள்கையினின்று திராவிடர் கழகம் தோன்றிற்று. திராவிடர் கழகத்தினின்று திராவிடர் முன்னேற்றக் கழகம் கிளைத்தது. திராவிடர் முன்னேற்றக் கழகத்தினின்று, அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் பிரிந்து வலுத்து வருகின்றது. தி.மு.க.வும் அண்ணாதுரையார் தோற்றுவித்ததே யாதலால், அதுவும் அ.தி.மு.க.வே. அவர் காலத்தில் அவர் பெயர் அவர் தோற்றிய கட்சிப் பெயரோடு சேர இடமில்லை. ஆயின், அவர் காலத்திற்குப்பின் இடமுண்டு.

மூவாயிரம் ஆண்டு ஆரியத் தடையால் முடங்கிக் கிடந்த தமிழும் தமிழரும் முன்னேறவும், இந்தியை வடநாட்டிற்குத் துரத்தவும் தமிழர் ஒற்றுமை இன்றியமையாததாதலால், தி.க., தி.மு.க.,