பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

65


அ.தி.மு.க. ஆகிய முக்கட்சியும் உடனே ஒன்றாதல் வேண்டும் அல்லது ஒன்றுசேர்தல் வேண்டும். கட்சித் தலைவர் இனநலம் நோக்கித் தத்தம் பிணக்கை விட்டுவிடுதல் வேண்டும்.

இங்கிலாந்திலுள்ள மூவேறு கட்சிகளும் தத்தம் கொள்கை குறிக்கோளில் முற்றும் அல்லது மிகவும் வேறுபட்டிருப்பினும், மொழியென்னும் ஒரு செய்தியில் ஒரு கட்சிபோன்றே இயங்கும். அத்தகைய பண்பாட்டையே, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அல்லாத தமிழ்நாட்டுக் கட்சிகளும் மேற்கொள்ளல் வேண்டும். தமிழைப் போற்றாத கட்சி தமிழர் கட்சியுமாகாது; தமிழ்நாட்டுக் கட்சியுமாகாது.

5. வரிசை யறிதல்

அரசன் அல்லது ஆட்சித்தலைவன் கலைஞர், புலவர், பாவலர், அறிஞர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், பணித்திறவோர் முதலியோர்க்குப் பரிசளிக்கும்போதும் பட்டம் வழங்கும்போதும் வேறு சிறப்புச் செய்யும்போதும், அவரது தகுதியுந் தரமுமாகிய வரிசையறிந்து செய்தல் வேண்டும். பரிசளித்தல் எளிது; வரிசையறிந் தளித்தல் அரிது.

"ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மாவண் டோன்றல்
அதுநற் கறிந்தனை யாயின்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டேம்” (புறம். 121)

என்று, கபிலர் மலையமான் திருமுடிக்காரியை நோக்கிப் பாடினார். இவ் வேண்டுகோள் எல்லா ஈகையாளர்க்கும் ஏற்கும்.

தமிழர் வழிகாட்டியருள் திருவள்ளுவர்க்கு அடுத்தவர் மறைமலையடிகளே; சுப்பிரமணிய பாரதியா ரல்லர்.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்த-நிறை
மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான்.”

இது தொன்மக் கதை.

"வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
..............................
வந்தே மாதரம் வந்தே மாதரம்.”