பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழ் இலக்கிய வரலாறு


இது அசுணமாவிற்கு முன்பு இன்னியாழெழீகிப் பின்பு வன்பறையறைவது போன்றது.

"செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்.”

இதை இராசகோபாலாச்சாரியார் போன்றாரும் ஒத்துக்கொள்ளார்.

"ஓம் சக்தி சக்தி சக்தி யென்று சொல்லு”

இத்தகைய வடசொற் கலப்பு தமிழ்ப்பாட்டிற்கு ஏற்காது.

ஆரியன் என்ற சொல்லும் உணர்ச்சியும் ஆங்காங்கு ஓங்கித் தோன்றுகின்றன. பாரதியார் பாடல்களுட் பெரும்பாலன பிராமணருக்கும் பேராயத்தாருக்குமேயேற்கும்.

புலவருக்குள், ஆரியத்தையும் இந்தியையும் எதிர்த்துத் தமிழைப் போற்றும் வாய்மைக் கொள்கையரையும்; அவ்விரண்டையும் ஏற்றும் எதிர்க்காதும் தமிழைக் காட்டிக்கொடுக்கும் அல்லது பொருளீட்டும் வையாபுரிகளையும் வணிகப் புலவரையும் பிரித்தறிதல் வேண்டும்.

பெரும்புலவருள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் வல்லவர். பேரா. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரைவேந்தர்; சிந்தாமணிச் செல்வர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை இலக்கணப் புலவர்; மயிலை. சீனி வேங்கடசாமி வரலாற்றாராய்ச்சியாளர்.

பாவருள் இசைப்பாட்டிசைப்பாரும் செய்யுள் செய்வாரும் வெவ்வேறு. செய்யுள் செய்வாருளுள்ளும், தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் வாழ்விற்கும் ஏற்றவாறு பல்வகைப் பனுவல் இயற்றுவாரும் காதற் பாட்டொன்றே பாடுவாரும் வெவ்வேறு.

கலைஞர்க்குப் பரிசளிக்கும்போது, தகுதியை மட்டுமன்றித் தேவையையுங் கவனித்தல் வேண்டும். அடிக்கடி இசையரங்கு நிகழ்த்தி ஆயிரக் கணக்காகப் பொருள்பெறும் மிடற்றிசைஞர்க்குப் பொற்றாமரையும், அங்ஙனமே, நடவரங்கு நிகழ்த்திப் பெரும் பொருள் பெறும் நடனியர்க்குத் தலைக்கோலும் வழங்கினாற் போதும்.

இயல் இசை நாடகம் மூன்றும் முத்தமிழ் எனப்படுதலாலும், இயலில் தேர்ச்சி பெறவும் மதிநுட்பமும் நெடுங்கால வுழைப்பும் வேண்டியிருத்தலாலும், பரிசளவில் அல்லது சிறப்புச் செய்யும் வகையில், வேறுபாடின்றி, முத்தமிழ்ப் புலவரையும் சமமாகவே கருதுதல் வேண்டும். மிடற்றிசை வாய்ப்பாட்டு.