பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

67



6. இந்து மதத்தினின்று தமிழ் மதத்தைப் பிரித்தல்


இந்துமதம் என்பது ஒரு தனி மதமன்று. தமிழர் மதம் இரண்டும் ஆரியர் படைத்துக்கொண்ட பிரம வணக்கமுங் கலந்த கலவையே இந்துமதம்.


சிவமதம் (சிவனியம்), திருமால்மதம் (மாலியம்) இரண்டும் தூய தமிழர் மதங்கள். இவை முறையே, குறிஞ்சிநிலச் சேயோன் வணக்கத்தையும் முல்லைநில மாயோன் வணக்கத்தையும் மூலமாகக் கொண்டவை. சமணமும் புத்தமும் அல்லது கிறித்தவமும் இசலாமும் போல, இவ்விரண்டும் முற்றும் வேறுபட்டவை. திருவானைக்காச் சிவனடியார் திருவரங்கஞ்சென்று திருமாலையும், திருவரங்கத் திருமாலடியார் திருவானைக்கா சென்று சிவனையும் தொழார். சிவனும் திருமாலும் தனித்தனி முத்தொழிலிறைவன் என்பதே, இவ்விரு மதக் கொள்கையும்.

ஆரியப் பூசாரியர் தமிழ மதங்களை ஆரியப்படுத்தும் பொருட்டு, இறைவன் முத்தொழிலைத் தனித்தனி பிரித்து, தாம் படைத்துக் கொண்ட நான்முகனைப் படைப்புத் திருமேனியென்றும், திருமாலைக் காப்புத்திருமேனியென்றும் வகுத்து, முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்துவிட்டனர். ஆயினும், இது இன்றும் புராண ஏட்டளவில் உள்ளதேயன்றி நடைமுறையிற் கைக்கொள்ளப்படவில்லை. தமிழர் நான்முகனை எங்கேனும் வணங்குவதுமில்லை.

ஆரியர் இந்து மதத்தில் தம் சிறுதெய்வ வணக்கத்தையும் பல தெய்வ வணக்கத்தையும் வேள்வி வளர்ப்பையும் புகுத்தியிருப்பதனாலும், பிராமணப் பூசாரியரைக் கொண்டு சமற்கிருதத்திலேயே வழிபாட்டை நடத்துவதனாலும், இதனால் தமிழுக்கு இழிவும், தமிழர்க்கு இழிவோடு பிழைப்பின்மையும் நேர்வதனாலும், தமிழர் தம் மதத்தைத் தூய்மைப்படுத்தி ஆரிய அடிமைத்தனத்தினின்று விலகிக்கொள்வதே தக்கதாம்.

ஆதலால், இறைவனைச் சிவன் என்னும் பெயரால் வழிபடுபவன் தன்னைச் சிவனியன் (சிவமதத்தான்) என்றும், திருமால் என்னும் பெயரால் வழிபடுபவன் மாலியன் (திருமால் மதத்தான்) என்றும், சொல்லல் வேண்டும். பொதுப்படச் சொல்லின், தென்மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்றே சொல்ல வேண்டும். இந்து என்பது ஆரிய அடிமைத்தனத்தையே குறிக்கும்.

7. வண்ணனை மொழிநூல் விலக்கு

மேலை மொழிநூலார், தமிழின் தொன்மை முன்மையறியாது சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்தாய்ந்து மொழிமூலத்தை-