பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழ் இலக்கிய வரலாறு


அறிய முடியாது முட்டுண்டு, இயற்கைக்கும் உண்மைக்கும் உத்திக்கும் மாறாக, வரலாற்றுத் தொடர்பை அறவே விலக்கி அறிவியன் முறைப்படாததும் நிறைவற்றதுமான வண்ணனை மொழிநூல் என்னும் புது மொழிநூல் முறையைத் தோற்றுவித்துள்ளனர். இது பர்.தெ.பொ.மீ. யால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிற் புகுத்தப்பட்டுள்ளது.

இது பழந்தமிழிலக்கண நூலார் இட்ட செந்தமிழ் வரம்பு மீறி அவர் விலக்கின கொடுந்தமிழையும் கொச்சைத்தமிழையும் ஏற்றுக் கொள்வதனாலும், மொழிகளின் கொடிவழி முறையை அறிய முடியாவாறு வரலாற்றை விலக்குவதனாலும், தமிழின் வளர்ச்சிக்கு நிலையான வலுத்த முட்டுக்கட்டை யிடுவதனாலும், சொற்களின் வேரையும் மூலப்பொருளையும் காணும் முயற்சியை அறவே தடுப்பதனாலும், தமிழ்நாட்டு முப்பல்கலைக் கழகங்களினின்றும் உடனே விலக்கப்படற் பாலதாம்.

அதிகாரிகள் இதை உடனடியாய்க் கவனித்து நீக்கி, இன்னும் ஓராண்டிற்குள் கால்டுவெல் ஐயர் காலத்து வரலாற்று மொழிநூலை மீண்டும் புகுத்தாவிடின், மாணவர் வாயிலாக வாயிலாக முழு வெற்றி பெறும்வரை வலுத்த கிளர்ச்சி நடைபெறும் என்பதை இதனால் அறிவிக்கின்றேன்.

8. இந்தியொழிப்பு

(1) இந்தியைப் புகுத்திய சூழ்நிலை

எல்லா வகையிலும் நலம்பயப்பதும் இந்திய ஓராட்சிக்கும் தன்னாட்சிக்கும் வழிகோலியதும் ஈடிணையற்றதுமான, ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியாயிருக்கும்போது, பொதுமொழி வினாவிற்கே இடமின்மை.

திடுமென்று ‘விடுதலை’ (ஆங்கிலராட்சிநீக்கம்) கிடைத்ததால், தேசமெங்கும் மருட்சியும் மகிழ்ச்சியும் மலிந்து, எதிர்க்கட்சி களெல்லாம் அடங்கியொடுங்கி, பேராயத்தலைவர் எது செய்யினும் எதிர்ப்பிற் கிடமில்லா திருந்தமை.

தமிழரும் திரவிடருமான தென்னாட்டுப் பேராயத்தாரெல்லாம் ஆரிய அடிமைத்தனத்தில் ஆழ்ந்துள்ளமை.

(2) இந்தியைப் புகுத்திய முறைகேடு

‘விடுதலை’ பெறுமுன் இந்தியைப்பற்றி முடிபு செய்யாமை.

அரசியற் கட்சித் தலைவர் கல்வித்துறையிலும் மொழித்துறையிலும் அடாது தலையிட்டமை.