பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலம்

69




கல்வியதிகாரிகள் மொழியறிஞர் ஆகியோரின் கருத்தைக்கேளாமை.

பொதுமொழித் திட்டக்குழுவில் மொழிக்கொரு படிநிகராளியைச் (Representative) சேர்க்காமல், இந்திக்குப் பலவுறுப்பி னரைச் சேர்த்துக் கொண்டமை.

தமிழுக்கு மறைமலையடிகளையேனும் சோமசுந்தர பாரதியையேனும் சேர்க்காமை.

தொடர்ந்து நடைபெற்ற முக்கூட்டத்திலும் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் சரிசமக் குடவோலை கிடைத்தும், குழுத் தலைவர் நடுநிலை திறம்பித் தம் குடவோலையை இந்திக்கிட்டமை.

(3) இந்தியின் தகுதியின்மை

இக்கால அறிவியலிலக்கியத்தோடு, வடமொழியிலும் தமிழிலுமுள்ள பண்டையிலக்கியமுமின்மை.

சொல்வளமில்லாச் சிறுமொழியும், மிகத் திரிந்த கொச்சை மொழியும், வளர்ச்சிக்கேற்ற வேர்ச்சொல் இல்லாமொழியும், வடஇந்திய ஒருநாட்டு மொழியும், தென்னாட்டார்க்கு ஆங்கிலம் போன்றே அயன்மொழியு மாயிருத்தல்.

(4) ஆங்கிலம் அயன்மொழியன்மை

இந்தியருள் ஒரு வகுப்பாரான ஆங்கிலோ இந்தியரின் தாய் மொழியாயிருத்தல்.

நூற்றிற்கெழுபது கிரேக்க இலத்தீனமும், பத்து ஆங்கில சாகசனியமும், பத்துத் தமிழும், பத்து ஏனை மொழிகளுமாக ஏறத்தாழ எல்லா மொழிச் சொற்களையுந் தன்னகத்துக்கொண்டு உலகப் பொதுக் கலவை மொழியாயிருத்தல்.

தமிழுக்கு மிக நெருக்கமாயிருத்தல்.

(5) ஆங்கிலத்தின் இன்றியமையாமை

இக்கால அறிவியல் தோன்றியதும் வளர்ந்துவருவதுமான மொழியாயிருத்தல்.

மூவிலக்கத்திற்குமேல் ஐயிலக்கம் வரை மதிப்புள்ள சொற்களைக் கொண்டு, இற்றை மாந்தன் நுண் கருத்துகளையெல்லாம் தெரிவிக்கும் மாபெரு வளமொழியாயிருத்தல்.

இன்று உலகப் பொதுமொழிகளுள் ஒன்றாயும், எதிர்காலத்தில் ஒரே உலகப் பொதுமொழியாய் வழங்கக் கூடியதுமாயிருத்தல்.