பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழ் இலக்கிய வரலாறு



இந்தியப் பல்கலைக்கழகங்களின் தொடர்பு மொழியாயிருத்தல்.

இந்திய வொற்றுமைக்கும் இந்தியரின் வெளிச்செலவிற்கும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பிழைப்பிற்கும் இன்றியமையாத மொழியாயிருத்தல்.

(6) இந்தியால் வருங்கேடு

இரண்டாந்தரக் குடிவாணர் நிலை, இந்தியார்க்கு ஏனையர் என்றும் அடிமைப்பட்டிருத்தல், மாணவர்க்கு மும்மொழிக் கல்விச் சுமை, தமிழாங்கிலம் மட்டுங் கற்றவர்க்கு வேலையின்மை முதலியன.

(7) இந்தியார் ஏமாற்று

இந்தியைத் திணிக்கமாட்டோம் என்பதும், ஆங்கிலக் கல்வி தேவையில்லை என்பதும், மும்மொழித் திட்டத்தையே யாமுங் கடைப் பிடிப்போம் என்பதும் துணிச்சலான முதல்தர ஏமாற்றே.

இந்தியாரின் மும்மொழித்திட்டம் பிறமொழியார்க்கே; தாம் இந்தியும் ஆங்கிலமும் ஆகிய இரு மொழித்திட்டமே மேற்கொள்வர். ஆங்கில அறிவின்றி இக்காலம் வாழ இயலாததலால், இந்தியை இந்தியா முழுவதும் புகுத்தும்வரை, ஆங்கிலத்தை மறை முகமாகவும் அதன்பின் வெளிப்படையாகவும் கற்பர்.

(8) நேரு உறுதிமொழியும் நீலியுறுதி மொழியும் ஒன்றே

நேரு உறுதிமொழி, இந்தித் திணிப்புப் பிந்திநிகழும் என்பதேயன்றி நீக்கப்படும் என்பதன்று. இது மும்மொழித் திட்டத்தை மேற்கொண்ட திரவிட நாடுகட்கே ஏற்கும்; இருமொழித் திட்டத்தைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஏற்கவே ஏற்காது. ஆதலால் அது தனித்தே உடனடியாக முழுவலிமையுடன் இந்தித் தொடர்பை எதிர்த் தொழித்தல் வேண்டும்.

தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்று சொன்னவனுக்கு, ஒருகிழமை பொறுத்துத் தூக்குவோம் என்பது நன்மை பயக்கும் விடையன்று.

(9) தமிழ்நாட்டரசின் கடமை

அரசினர் அலுவலகமாயினும் தனியார் அலுவலகமாயினும், பெயர்ப் பலகைகளில் தமிழும் ஆங்கிலமுமன்றி இந்திச்சொல் இருத்தல் கூடாது.

தமிழ்நாட்டில் வழங்கும் அஞ்சற் படிவங்களும் அட்டை உறை முத்திரைகளும் தமிழாங்கிலச் சொற்களையே கொண்டிருத்தல் வேண்டும்.