பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழ் இலக்கிய வரலாறு


ஒன்றுகூட்டி, ஒரே புதிய திருந்திய விளக்கமான தெளிநடை விரிவுரை வரைவிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

மேலையறிவியல் கம்மியக் குறியீடுகளை யெல்லாம் மொழி பெயர்க்கவும், அவ்வப்போது வேண்டிய புதுச்சொற்களைப் புனையவும், அறிவியல் திறவோரும் தனித்தமிழ் வல்லுநரும் கொண்ட ஒரு நிலையான குழுவை அமர்த்தல் வேண்டும்.

தமிழ்மொழி இலக்கியம் நாகரிகம் பண்பாடு வரலாறு முதலியவற்றை உலகெங்கும் பரப்புமாறு, ஒரு சுற்றுலாக் குழுவையும் தோற்றுவித்தல் வேண்டும்.

தாளைச் சிக்கனமாகச் செலவிடவும், வழுவுள்ளனவும் பயனற்றனவுமான வெளியீடுகளைத் தடுக்கவும், பொத்தகக் குழுவொன்றும் இருப்பது நல்லது.

ஐந்திணை நிலமும் அறுதிணைப் போரும் பெயர்பெறக் காரணமாயிருந்த பூச் செடி கொடி பூண்டு மரங்களை, ஒரு பூங்காவில் வளர்த்துப் பொருட்காட்சியகமாக்கலாம்.

முப்பு (மூவுப்பு) முறை தெரிந்த தமிழ் மருத்துவர் யாரேனு மிருப்பின், தேடிக் கொணர்ந்து போற்றிக் காக்கலாம்.

(10) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி

ஒரு மொழியின் பெருமையை அதன் சொல்வளம் காட்டும். ஒரு மக்கள் வகுப்பாரின் நாகரிகத்தை அவர் இலக்கியங் காட்டும். இலக்கியமெல்லாம் சொல்லால் ஆக்கப்படுவதால், ஒரு மொழியின் சொற்களையெல்லாந் தொகுத்துக் கூறும் அகரமுதலி அதன் சொல் வளத்தையும் அதிலுள்ள இலக்கிய வளத்தையும் ஒருங்கே காட்டும்.

இன்று தமிழிலுள்ள பெரியகரமுதலி தமிழ்ப் பகைவரால் தொகுக்கப்பட்டு, அடிப்படைத் தமிழ்ச்சொற்களை யெல்லாம் வட சொல்லென்று காட்டியிருப்பதால், தென்சொற்கட்கெல்லாம் பொருள் கூறுவதோடு, வேர்ப்பொருள் காட்டித் தமிழென விளங்கும் சொற் பிறப்பியல் அகரமுதலி இன்றியமையாததாகின்றது. இதற்கு ஒரு கோடியுருபா வேண்டினும் ஒதுக்கித் தொகுப்பிப்பது, தமிழரசின்மேல் விழுந்த தலையாய கடமையாகும்.