பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழ் இலக்கிய வரலாறு


படுமாறு, மொழியின் ஒலியுறுப்புகளைக் கட்புலனாகிய வரிவடிவில் எழுதிக்காட்டுவதே இலக்கியம் என்னும் எழுத்துமொழி. ஆகவே, மக்களின்றிக் கருத்தில்லை; கருத்தின்றி ஒலியில்லை; ஒலியின்றி வரிவடிவென்னும் எழுத்தில்லை; எழுத்தின்றி எழுதப்பட்ட இலக்கியமில்லை.

ஆகவே, ஆரியவேதம் மாந்தனாலும் இறைவனாலும் இயற்றப்படாது தானே தோன்றிற்றென்றும், மரைக்காடு என்னும் ஊர்ப் பெயரை மறைக்காடு என்று மாற்றி, வேதங்கள் வழிபட்டுத் திருக்காப்புச் செய்த இடமென்றும், கூறி மக்களை யேமாற்றுவது, துணிச்சலான பொய்யும் கடுந் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

(5) சமற்கிருதம் இலக்கிய மொழியே

இந்திய ஆரியர் மொழி வழக்கற்றபின் எழுந்த வேத இலக்கிய மொழி தமிழொடு கலந்துற்ற விரிவே சமற்கிருதம். அது ஒருகாலும் பேசப்பட்டதன்று. ஆதலால், அது பிறந்ததுமில்லை; இறந்தது மில்லை; செயற்கையாகப் புனையப்பட்ட பாவை போன்றதே. இதை மேலையர் இனி அறிவர்.

(6) எல்லா மொழியும் கடன்கொண்டு வளர்ச்சி பெறா

"உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது." “கடிவாளமுஞ் சேணமும் இட்டாலும் கழுதை குதிரையாகாது.” ஒரு மொழி வளர்ச்சியடைய, ஏற்கெனவே சொற்பெருக்கும் வேர்ச்சொல் வளமுங் கொண்டிருத்தல் வேண்டும்; அல்லது, ஆங்கிலம்போற் புதுப்புனைவாளர் மொழியாயிருத்தல் வேண்டும். இரண்டுமில்லா இந்திபோன்ற இந்திய மொழிகளெல்லாம் ஆங்கிலம்போல் அறிவியல் மொழிகளாகப் பண்படுத்தப்பட வேண்டுமென்று, அளவிறந்து பொதுமக்கள் பணத்தைச் செலவிட்டு, ஆங்கிலத்தை யொழிக்கப் பார்க்கும் மூடக் கொள்கையையும் முட்டாள்தனத்தையும், பகடித் தனமாய்ப் பழித்துக்காட்டத் தென்னாலியிராமன் போன்ற திறமிக்க நகையாண்டி நாட்டிலில்லை.

(7) செந்தமிழும் நாப்பழக்கம்

தாய்மொழியில் தேர்ச்சி பெறுதற்கே பேச்சுப் பழக்கம் வேண்டுமெனின்,அயன்மொழியில் திறம்பெற அதன் இன்றியமையாமையைச் சொல்லவேண்டுவதில்லை. ஆங்கிலங் கற்கும் மாணவர்க்கு இலக்கணங் கற்பித்தல் மட்டும் போதாது; பேச்சுப் பயிற்சிக்கும் போதிய வாய்ப்பளித்தல் வேண்டும்.