பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

77


4. தமிழ் எழுத்து மாற்றம்

ஆரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையடைவதும், இந்தித் திணிப்பைத் தடுப்பதும், பிறவிக்குலப் பிரிவினையை ஒழிப்பதும், ஒற்றுமை யுறுவதும், அறிவியற் கல்வியில் தேர்ச்சி பெறுவதும், மூடப் பழக்கவழக்கங்களை விடுவதும், புத்தாராய்ச்சி செய்து புதுப்புனை வாற்றல் வாய்ப்பதுமான வழிகளாலன்றி, பண்டாடு பழநடையாக வழங்கிவரும் எழுத்துமாற்றத்தால் தமிழன் முன்னேற முடியாது. பிறமொழி யெழுத்துகளோடு ஒப்புநோக்கின், தமிழ் எழுத்துமுறை எத்துணையோ திருந்திய தென்று சொல்லவேண்டும். ஈ என்னும் வடிவை வ என்று குறிப்பதும், ஒளகார வடிவின் உறுப்பான ‘ள’ என்னுங் குறியைச் சிறிதாக எழுதுவதும் ஆகிய இரண்டே தமிழுக்கு வேண்டிய எழுத்துத் திருத்தமாம். குகர நெடிலை மேற்சுழிக்கலாம்.

5. பகுத்தறிவு விளக்கம்

குமரிநாட்டுத் தமிழிலக்கண முதனூலாசிரியன், பகுத்தறி வடிப்படையிலேயே, பொருள்களையெல்லாம் உயர்திணை, அஃறிணையென இரண்டாகப் பகுத்து, உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற இலக்கணம் வகுத்திருக்கின்றான்.

கடவுள் இல்லை யென்பதற்குப் போன்றே, உண்டு என்பதற்கும் பகுத்தறிவே துணை செய்கின்றது. உலகில் எத்துணை நாகரிகப் பண்பாட்டு நாடாயினும், இரவில் நகரவிளக்கு அரைமணி நேரம் எரியாது போயினும், ஐந்து நிமையம் அரசன் அதிகாரம் இல்லாது போயினும், காட்டுவிலங்கினுங் கேடாக நாட்டுமக்கள் நடந்து கொள்கின்றனர். அங்ஙனமிருக்க, உயிரற்ற பன்னிரு கோள்களும் பற்பல நாண்மீன்களும் இடைவிடாது பெருவெளியில் ஒழுங்காய் இயங்கிவருவது இயக்குவான் ஒருவனின்றி இயலுமோ? கடவுளுண்மையைக் காட்ட இதுபோல் வேறு சான்றுகள் எத்தனையோ இருப்பினும், இஃதொன்றே போதுமானதாம்.

ஆயினும்,நடுநிலையாக நோக்கி, இருசாராரும் ஒருவரை யொருவர் இகழாதுங் குறைகூறாதும் இருப்பதே பகுத்தறிவிற் கழகாம்.

பகுத்தறிவின் பயன்

இனி, உலகில் வேறு எந்நிலப் பகுதியிலும் இல்லாததும், இந்தியாவிலும் வடநாட்டினுந் தென்னாட்டிற் கடுமையாகவும் கண்டிப்பாகவும் கைக்கொள்ளப்படுவதும், தென்மொழியினத்தின் ஒற்றுமையைக் குலைத்து அதன் வலிமையைக் கெடுப்பதற்கே ஆரியராற் புகுத்தப்பட்டதும், தொழிலோடு சிறிதுந் தொடர்-