பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழ் இலக்கிய வரலாறு


அதிகாரக்குழு ஆரியச் சார்பானதினால், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது போன்ற கருத்தையன்றி,

கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி

என்பது போன்ற கருத்தைத் தழுவக் கூடாதென்று கட்டுரை வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுவிட்டது. அதனால், நான் அதிற் கலந்துகொள்ள இயலவில்லை.

மாநாட்டுக் குழு எங்ஙனம் தமிழுக்கு மாறானதென்பதற்கு, இஃதொன்றே போதுமானது.

விழாத்தொடக்க ஊர்வலம், மக்கட்பெருக்காலும் கலைக்காட்சி வகையாலும், அமெரிக்கரும் மெச்சும் வண்ணம் மாபெருஞ் சிறப்பினதாயிருந்தது. ஆயின், கிறித்துவிற்குப் பிற்பட்டனவும், பெரும்பாலும் தமிழ மதங்களைத் தழுவாதனவுமான ஐம்பெரும் பாவியங்களைத் தமிழ்த்தாயின் ஐம்மக்களாகக் காட்டியது, தமிழின் பெருமைக்குப் பேரிழுக்காகும். முதலிரு கழகங்களைச் சார்ந்தனவும், முழுத் தூயனவும், இறந்துபட்டனவும், தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளனவுமான எண்வகைப்பட்ட எத்துணையோ வனப்புக்களே, தமிழ்த்தாயின் உண்மையான மக்கள் போன்றவையாகும். பிற்கால ஐம்பெரும் பாவியங்களுள், இரண்டு சமணம்; இரண்டு புத்தம்; ஒன்றே ஓரளவு தமிழம்.

இனி, மாநாட்டு நடப்புநோக்கின், மறைமலையடிகள் போலும் வழிகாட்டும் அல்லது தமிழின் தலைமை நாட்டும் தலைவரின்றி, தமிழ் நெடுங்கணக்கைப் பிராமியின் திரிபென்றும், சில தென்சொற்களை அயற்சொற்களென்றும், சிந்துவெளி நாகரிகத்தை ஆரியரதென்றும், ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோன்றியவாறே தமிழுக்கு மாறான பல்வேறு கட்டுரைகளை, அச்சிட்டு வழங்கிப் படித்துச் சென்றமை தெரியவரும்.

மூன்றாம் மாநாடு மேலையாரிய நாட்டுப் பாரிசு மாநகரிலும், நாலாம் மாநாடு சிங்கள ஆட்சிக்குட்பட்ட யாழ்ப்பாணத்திலும், அவ்வவ்விடத்திற் கேற்றவாறு நடந்தேறின. ஒன்றிலும், தமிழ் தோன்றிய இடம் கூட ஆராயப்படவில்லை.

இந் நான்கு மாநாடுகளாலும் தமிழ்நிலைமை சற்றுந் திருந்தவில்லை. திருக்கோவில் வடமொழி வழிபாடோ தமிழ்நாட்டில் இந்தித் திணிப்போ, நீங்கியபாடில்லை; பர். பாலசுப்பிரமணியனார், பர். ஒளவை நடராசனார், பர்.ச.வே. சுப்பிரமணியம் போன்றார் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேய்ந்தராகும் வாய்ப்-