பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு

83


பில்லை; வயவர் சாண் மார்சல், அப்பர் ஈராசு, பர். ஆசுகோ பார்ப் போலா முதலிய பேரறிஞர் திரவிடம் என்று கூறிவந்த சிந்துவெளி நாகரிகம் ஆரியமாக மாறிவருகின்றது; தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ்நாட்டிலும் இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை; தமிழன் தமிழ்ப்பெயரே தாங்கி இயன்றவரை தனித் தமிழிலேயே பேசவேண்டும் என்னும் உணர்ச்சியும், தமிழ்க்காவலர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்க்கும் பிறக்கவில்லை.

உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திவரும் குழு, பெயர் விளம்பரத்தையே யன்றி உண்மையில் தமிழ் வளர்ச்சியை நோக்க மாகக் கொண்டதன்று. அதைத் தோற்றுவித்த அதன் செயலாளர் திரு தனிநாயக அடிகள் என்பார். அவர் பர்.தெ.பொ.மீ. யின் மாணவர். அவர் தமிழிற் பெரும்புலவருமல்லர்; மொழியாராய்ச்சியாளருமல்லர்; தனித்தமிழ் விருப்பினருமல்லர்; குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றக் கொள்கையினருமல்லர். சமற்கிருதப் பேரறிஞரான பேரா. பிலியோசா (Filliozat) என்னும் பிரெஞ்சியத் தொல்பொருளாராய்ச்சியாளரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திவருகின்றனர். அவருக்குப் பெருந்துணை வராயுள்ள மேலை மொழிநூலறிஞர் செக்கோசிலாவோக்கியா நாட்டுப் பர். காமில் சுவெலபில் என்பார். அவர் “நாலுவேலி நிலம்” என்னும் கொடுங் கொச்சைத்தமிழ்ப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழாய்ந்தவர்; சமற்கிருதத்தை ஆரியத்திற்கும் திரவிடத்திற்கும் மூலமாகக் கருதுபவர். இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காண்டு பிராமணியத்தைப் பெரிதும் பேணுபவர். இம்மூவரையுங் கொண்ட குழு, ஆங்காங்குத் தன் கொள்கைக் கிணங்கியவரைத் துணைக்கொண்டு, உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது.

இத்தகைக் குழுவின் பொறுப்பில் உலகத்தமிழ் மாநாடுகள் தமிழாராய்ச்சியின் பெயரால் தொடர்ந்து நிகழின், உலக நாட்டுத் தலைவரெல்லாம் மாநாட்டிற் கலந்துகொள்ளினும், கடல்வெள்ளம் போல் ஊர்வலம் திரளினும், உலகத் தலைமை நடிகையரெல்லாம் வந்து நடித்துப் பாடினும், இஞ்ஞாலம் உள்ளவரை, தமிழுக்கு மாறான பன்னாட்டுமொழிக் கருத்துச் சரக்குகள் பரிமாறும் உலகப் பொதுச்சந்தையாயிருக்குமேயன்றி, இம்மியும் தமிழ் திருந்தவும் தமிழர் முன்னேறவும் போவதில்லை. தமிழர் என்றும் அடிமையராயேயிருப்பர்.

இதுவரை இம் மாநாட்டமைப்பால் தமிழுக்கு வாய்த்த நன்மையெல்லாம் அடையாற்று அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனமே. அதற்கு மேனாட்டுப் பணவுதவி நின்றுபோயினும், தமிழ் நாடு அல்லது நடுவணரசு முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ளலாம்.