பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் 147 எண்ணுப்பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன்,ஆயிரம் என்னும் பெயரைக் கூட்ட வேண்டியதாயிற்று. எண் பண்டைப்பெயர் இற்றைப்பெயர் 9 தொண்டு ஒன்பது (தொன்பது) 90 தொண்பது தொண்ணூறு 900 தொண்ணூறு தொள்ளாயிரம் 9000 தொள்ளாயிரம் ஒன்பதினாயிரம் (ஒன்பது+ஆயிரம்) ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி (1000 X9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும். ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனை யெண்ணுப்பெயர்க ளெல்லாம் தனிமொழிகளா யிருக்க ஒன்பது என்பது மட்டும் தொடர்மொழியாயும், பது (பத்து) என்னும் வருமொழியைக் கொண்டதாயு மிருத்தல் காண்க. தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று தமிழில் வழங்குகின்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப் பத்தாம் இடப்பெயர் வழங்கிவருகின்றது. ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது, 'பொருந்தப் புகலல்' என்னும் உத்திபற்றியது. இக் கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19), உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ் (49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79) என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப் பெயர்கள் ஒழுங்கற்ற முறையிலமைந்தவை யென்பதை, நவாசீ (89) நின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம்.