பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

ம. திரளுக.

வேர்ச்சொற் கட்டுரைகள்

திரள = முழுதும். “திரள ஒப்பில்லையாகில் ஒருவகை யாலேதான் ஒப்புண்டோ” (ஈடு, 1:1:2).

திரளை = 1. கூட்டம். 2. கட்டி. 'சோறுவெண் டயிரினாற் றிரளை மிடற்றிடை நெருக்குவார்” (திவ். பெரியதி. 2 : 1 : 7). 3. நூலுருண்டை.

திரளை – திரணை = 1. திண்ணை. 2. எழுதக வேலை. 3. வைக் கோற்புரிக் கற்றை. 4. மாலைவகை. “ஒட்டிய திரணையோடு” (சிலப். 22 : 43). 5. உருண்டை.

திரட்சி = 1. கூட்டம். "திரட்சி விரும்பக் கையிலே பாத்திரத்தை யிருத்திய ” (பு. வெ. 3: 5, உரை). 2. உருண்டை வடிவம். 3. முத்து.

திரட்டு = தொகுப்பு. எ - டு : பட்டினத்தார் பாடற்றிரட்டு. திரள் - திரடு = மேடு (நெல்லை வழக்கு).

திரம் = 1. உரம். 2. வலிமை. 3. உறுதி. 4. நிலைபேறு. 'உலகைத் திரமென வுட்கொண்டு" (தாயு. பராபர. 274). 5. மலை. 6. பேரின்ப வீடு. 7. ஒரு தொழிற்பெயரீறு. திரம் - வ. ஸ்திர.

திரம் - திறம் = 1. உறுதி. 2. வலிமை. 3. நிலைபேறு. 4. கற்பு. "தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்" (சிலப். மங்கல. 27). 5. சமர்த்து. 'உன் திறத்தைக் காட்டு, பார்க்கலாம்' (உ. வ.). 6. கூட்டம். 7. ஆடு மாடு எருமை எவ்வெண்பது கூடின கூட்டம். 8. மிகுதி. 9. இயல்பு. "ஒருதனி நின்றாய் உன்திறம் அறிந்தேன்” (மணிமே. 4 : 96). 10. வகை. 11. கூறுபாடு. “நிற்றிறஞ் சிறக்க” (புறம். 6). 12. சார்பு. 13. கிளைப் பண். “குறைந்த நரம்பு திறமெனக் கொள்க” (பிங். 6: 325). 14. செயல். "தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய” (சிலப். 21:54). 15. கோலம். "தவத்திறம் பூண்டு தருமங் கேட்டு” (மணிமே. பதி. 93). 16. கொள்கை. “சமயக்கணக்கர் தந்திறங் கேட்டதும்” (மணிமே. பதி. 88). 17. இடையாட்டம் (விஷயம்). “பதைக்கின்ற மாதின் திறத்து” (திவ். இயற். திருவிருத்.

34).

18. செய்தி. “அத்திறங் கேட்ட” (காஞ்சிப்பு வாணீச. 27). 19. ஆம்புடை (உபாயம்). உய்திற மில்லை” (கம்பரா. திருவவ. 18). 20. திருவம் (பாக்கியம்). "திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை” (கம்பரா. திருவவ. 104). 21. பக்கம். 22. படித்தரம்.

திறம் - திறன் = 1. உறுதி. 2. கூறுபாடு. "திறனறிந் தேதிலா ரிற்கட் குருடனாய்” (நாலடி. 158). 3. பக்கம். “பெண்ணுரு வொருதிற னாகின்று’” (புறம்.1).