பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல் (துளைத்தற் கருத்துவேர்)

139

பாத்தல் = பகுத்தல். "தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்” (குறள். 1107).

பா-பாத்து. பாத்துதல் = பகுத்தல். 'படுதிரை வையம் பாத்திய பண்பே” (தொல். அகத். 2).

பாத்து = 1. பகுக்கை (சூடா.). 2. பங்கு (நாமதீப. 741). 3. பாதி (W.). 4. இணை. “பாத்தில் புடைவை யுடையின்னா” (இன். நாற். 3). 5. நீக்கம். “பாத்தில்சீர்ப் பதுமுகன்” (சீவக. 1845). 6. நான்கு என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக் குறி(W.).

நானிலம், நால்வகுப்பு, நாற்பா, நாற்பொருள், நால்வகை யுண்டி, நால்வகை யிசைக்கருவி முதலிய பல்வேறு பொருட் பாகுபாடும்; நாலா பேரும், நானா வகை என்னும் வழக்கும்; பகுத்தலைக் குறிக்கும் சொல்லை நான்கு என்று பொருள்படும் குழூஉக்குறி யாக்கின.

பாத்துப்புலு = நாற்பது என்னும் எண்ணைக் குறிக்கும் குழூஉக்குறி (W.).

பாத்து- பாத்தி = 1. பகுதி. "மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே” (தொல். தொகை. 30). 2. பங்கு (W.). 3. இறைவைப் புன்செய்ப் பகுதி, சிறு செய். “பாத்தியுள் நீர்சொரிந் தற்று” (குறள். 718). 4. சிறுவீடு (1951.).

ம., க.பாத்தி.

பாத்திப் படுத்துதல் = நிலைபெறச்செய்தல். “பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு” (குறள். 465).

பாத்தி - பத்தி = 1. பாத்தி (W.). 2. செய்தித்தாள், பொத்தகம் முதலியவற்றின் நீளவாட்டுப் பகுதி. செய்தித்தாள் பல பத்தி கொண்டது (உ.வ.). 3. வகுப்பு (W.). "வரிசை 'பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்” (சிலப். 16 : 118). 4. முறைமை (சூடா.). 5. அழகு வேலைப்பாடு. “பத்திப் பல்வினை” (பெருங். இலாவாண. 6 : 55). 6. கடவுள்பாற் பட்ட பற்று. “பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்” (திருவாச. 2 : 119). 7. கடவுள் வழிபாடு (சூடா.). 8. அரசன், ஆசிரியன், தந்தை, கணவன், முனிவன் முதலிய பெரியோரிடத்து வைக்கும் பற்று அல்லது செய்யும் பணிவிடை.

பத்தி (வரிசை) - வ. பங்க்தி (pankti).

பத்தி (பெரியோர் மாட்டுப் பற்று) – வ. பக்தி (bhakti).