பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

வேர்ச்சொற் கட்டுரைகள்

நாகபாச. 73). 3. ஒழுக்கத்தில் உறுதியாயிருத்தல். "வீடுபெற நில்" (ஆத்திசூடி). 4. நிலைத்திருத்தல். "என்வலத்தில் மாறிலாய் நிற்க” (பெரியபு. கண்ணப்ப. 185). 5. இடங்கொண்டிருத்தல். “குற்றிய லிகர நிற்றல் வேண்டும்” (தொல். எழுத்து. 34). 6. வேலை யொழிதல். வேலை நின்றுவிட்டது (உ.வ.). 7. அடங்கி யமைதல். “சாயவென் கிளவிபோற் செவ்வழியாழிசைநிற்ப" (கலித். 143: 38). 8. எஞ்சியிருத்தல். “நின்றதிற் பதினையாண்டு” (திவ். திருமாலை. 3). 9. காலந்தாழ்த்தல். “அரசன் அன்று கேட்கும், தெய்வம் நின்று கேட்கும்”. 10. நீடித்தல் (பழ.).

ம.நில்க, க.நில்.

நில் (ஏவல் வினை) = 1. பொறுத்து நிற்றல். நில், வருகிறேன்(உ.வ.). 2. வினைசெய்யாது விடுதல். "நில்லு கண்ணப்ப” (பெரியபு. ஆறுமுக. உரைநடை. ப. 97). “கண்ணப்ப நிற்க” (பெரியபு. கண்ணப்ப.183).

நில்- நிலம் = 1. நீர்போல் நீண்டோடாது ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. “நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” (தொல். மரபு. 90). 2. நிலத்தின் புறணி. “நிலந்தினக் கிடந்தன நிதி” (சீவக. 1471). 3. மண். “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்” (குறள். 452). 4. நன்செய் அல்லது புன்செய். “செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து” (குறள். 1039). 5. மேன்மாடம் அல்லது மேல்தளம். “பல நிலமாக அகத்தை யெடுக்கும்” (ஈடு, 4:9:3). 6. நீரும் நிலமுஞ் சேர்ந்த ஞாலம். “நிலம்பெயரினு நின்சொற் பெயரல்” (புறம். 3). 7. நிலத்திலுள்ளார். "நிலம் வீசும்... குன்றனைய தோள்” (சீவக. 287). 8. நிலமகள். 9. நாடு. "செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” (தொல். எச்ச. 2). 10. நிலத்துண்டு. "நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து” (தொல். சிறப்புப் பா.). 11. யாப்பின் நிலைக்களம்.

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்” (தொல். செய். 78)

12. செய்யுளடி யெழுத்து. "மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும்” (தொல். செய். 49). 13. எழுத்தசை சீரென்னும் இசைப்பாட்டிடம். "நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும்” (மணிமே. 28 : 42). 14. இடம். "நிலப்பெயர்” (தொல். பெயர். 11). 15. வரிசை. "கற்றுணர்ந் தோரைத் தலைநிலத்து வைக்கப்படும்” (நாலடி. 133). 16. புலனம் (விடயம்). “அவதார ரகசியம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல" (ஈடு, 1:3:11).

ம.நிலம்,க.நெல, தெ. நேல.