பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/103

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

94

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன் குடிகளை அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளை; உலகு தழீஇ நிற்கும் - நாடு முழுதும் விடாது பற்றி நிற்கும்.

அன்பாக அரவணைத்துக் காக்கும் அரசனைக் குடிகளும் அன்பாகப் போற்றிநிற்பர் என்பது கருத்து.

அணைத்தல் இன்சொற் சொல்லுதலும் தளர்ந்தவிடத்து வேண்டுவன கொடுத்துத் தாங்குதலும். மாநில மன்னன் மூவேந்தருள் ஒருவனான பெரு நிலவரசன். குறுநில மன்னர், பெருநில மன்னர் என அரசர் இருதிறத்தினராதலால், வேந்தனை மாநில மன்னன் என்றார். கோல், உலகு என்பன ஆகுபெயர். கோல் என்றதற்கேற்பச் சிறப்பாக ஆளுதலை ஓச்சுதல் என்றார். ஓச்சுதல் உயர்த்துதல். குடி என்றது தளர்ந்த குடிகளை, 'தழீஇ' சொல்லிசை யளபெடை.

545. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு.

(இ-ரை.) பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு திரண்டு; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் உள்ளனவாம்.

'கோலோச்சும்', 'மன்னவன்' என்பவற்றிற்கு முன்பு உரைத்தவாறு உரைக்க. செங்கோலரசன் மண்ணுலகில் இறைவனின் படிநிகராளியா யிருத்தலால். இயற்கையும் அவனுக்கு அடங்கி நடக்கும் என்பதாம்.

546. வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்.

(இ-ரை.) மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று, அவன் அரசாட்சியே; அதுவும் கோடாது எனின் - அவ் வரசாட்சியும் அங்ஙனஞ் செய்வது அறநெறி தவறாதிருந்த பொழுதே.

"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" (புறம்.55)

என்றார் மதுரை மருதனிளநாகனார். வெற்றிதருவது வேலன்று கோல் என்னும் எதுகை நயமும், எறியும் வேலன்று ஏந்தும் கோலே யென்னும் முரண்நயமும், கவனிக்கத் தக்கன. 'அதூஉம்' இன்னிசை யளபெடை. மணக்குடவர் 'கோடா னெனின்' என்று பாடங் கொள்வர். அப் பாடத்திற்கு, கருவியின் வினை சினைவினை போல முதல்வினைமேல் நின்றதாகக் கொள்க.