பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/104

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

95



‘கோல்அதூஉம்` என்பது போன்றே 'இல்வாழ்க்கை அஃதும்’ (46) என்னும் தொடரும் அமைந்திருத்தலை, ஒப்புநோக்கி யுணர்க.

547. இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.

(இ-ரை.) வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான்; முட்டாச் செயின் அவனை முறை காக்கும் - முட்டுப்பாடு நேர்ந்தவிடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.

முட்டில்லாமற் செய்தல் மனுமுறைச் சோழன் தன் மகனை முறை செய்ததும், பொற்கைப் பாண்டியன் தன் கை குறைத்ததும் போல்வதாம். இனி, சிக்கலான வழக்குகளைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும், முட்டாது செய்தலின் பாற்படும். 'வையகம்' முதலாகு பெயர். 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

548. எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் றண்பதத்தாற் றானே கெடும்.

(இ-ரை.) எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை (நியாயம்) வேண்டினவர்க்குக் காட்சிக் கெளியனாயிருந்து, அவர் சொல்லியவற்றை அறநூலறிஞருடன் ஆராய்ந்து, உண்மைக்கேற்பத் தீர்ப்புச் செய்யாத அரசன்; தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான்.

"அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்" (சிலப்பதிகம்,55)

என்றதற் கேற்ப முறைசெய்யா அரசன் பகைவரின்றியுந் தானே கெடுவான் என்பதாம். பதம் நிலைமை. எண்மை எளிமை. 'எண்பதத்தான்' குறிப்பு முற்றெச்சம். 'ஓரா' செய்யா என்னும் வாய்பாட்டு (இறந்தகால வுடன்பாட்டு) வினையெச்சம். 'செய்யா 'ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 'தண்பதம்' பழியும் பளகும் (பாவமும்) அடைந்து நிற்கும் நிலை. ஏகாரம் பிரிநிலை.

549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில்.