பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/105

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

96

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை) குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - தன் குடிகளைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வருத்தாது பேணி, அவர் குற்றஞ் செய்யின் அதைத் தண்டனையால் நீக்குதல்; வேந்தன் வடு அன்று தொழில் - அரசனின் குற்றமன்று, அவன் கடமையாம்.

‘குடிபுறங் காத்தோம்பி' என்றதனால், சில தீயோரின் குற்றங் கடிதலும் நல்லோரான குடிகளைப் பாதுகாத்தற் பொருட்டே யென்பது பெறப்படும். அரசன் குற்றவாளிகளைத் தண்டிக்கும் முறை மன்றுபாடு. தண்டா, குற்றம் என மூவகைப்படும். மன்றுபாடென்பது பணத்தண்டனை; தண்டா என்பது துன்பத்தண்டனையும் உறுப்பறைத் தண்டனையும் கொலைத் தண்டனையும்; குற்றம் என்பது கோயில் விளக்கெரித்தல் போன்ற திருக்கடமைத் தண்டனை. துன்பத்தண்டனை பொதுவும் இடந்தொறும் வேறுபடுவதும் என இருதிறத்ததாம். அவை மீண்டும் மானக்கேட்டொடு கூடியதும் கூடாதது மென இரு வகையனவாம். 'குற்றங் கடிதல்' என்றதனால். இங்குத் தழுவப்பட்ட தண்டனை வகைகள் கொலையொழிந்த எல்லாமாகும்.

550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.

(இ-ரை.) வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவரைக் கொலையால் தண்டித்து நல்லோரைக் காத்தல்; பைங்கூழ்களை கட்டதனொடு நேர் - உழவன் களைகளைக் களைந்து பசும்பயிர்களைக் காத்தலோ டொக்கும்.

கொடியராவார் உணராது கொலை செய்வார், ஊரில் தீவைப்பார். குடிநீர் நிலையில் நஞ்சிடுவார், வழிப்பறிப்பார், கொள்ளையிடுவார், கோயிற் சொத்தைக் களவு செய்வார். வெளிப்படையாகப் பிறனில் விழைவார். அரசனுக்கும் அஞ்சாதார் முதலியோர். இத்தகைய பொல்லாரை அரசன் கொல்லாவிடின் நல்லோர் வாழ முடியாதாதலின், அவரைக் கொல்வது `பைங்கூழ் களைகட்டதனொடு நேர்' என்றார். வேந்தன் என்பது வேந்து எனக் குறைந்து நின்றது.

அதி. 56 - கொடுங்கோன்மை அதாவது, அரசனாற் கையாளப்படும் நேர்மை யில்லா ஆட்சி முறைமை. நேர்மையில்லா ஆட்சி வளைந்த கோல் போலிருத்தலால் கொடுங்கோல் எனப்பட்டது. கொடுங்கோலின் தன்மை கொடுங்கோன்மை.