பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/106

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

97



இது செங்கோன்மைக்கு மாறாகலின், அது கூடாதென்பதற்கு அதன்பின் வைக்கப்பட்டது.

551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து.

(இ-ரை.) அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருளாசையாற் குடிகளை வருத்துந் தொழிலை மேற்கொண்டு முறையல்லாதவற்றைச் செய்தொழுகும் வேந்தன்; கொலை மேற்கொண்டாரின் கொடிதே - பகைமையினாற் கொல்லுதல் தொழிலை மேற்கொண்டொழுகுவாரினுங் கொடியனேயாவன்.

சிறிது பொழுதே செய்யுங் கொலைத் துன்பத்தினும் எப்பொழுதும் செய்யும் அலைத்துன்பங் கொடிது என்பதாம். வேந்து பொருளால் உயர்திணை யாயினும் சொல்லால் அஃறிணையாதலின் அஃறிணை முடிவு கொண்டது. ஏகாரம் தேற்றம்.

552. வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங் கோலொடு நின்றா னிரவு.

(இ-ரை.) கோலொடு நின்றான் இரவு - கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல்; வேலொடு நின்றான் இடு என்றது போலும் - கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறி கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன் கைப்பொரு ளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும்.

அரசன் குடிகளிடம் அச்சுறுத்திக் கேளாவிடினும், குடிகள் கொடாவிடின் தப்பாது தண்டிக்கப்படுவர் என்னும் குறிப்பிருத்தலால், அவன் இரப்பதும் வழிப்பறி கள்வன் ஏவல் போன்றதே யென்றார். 'வேலொடு நின்றான்' என்பதால் வழிப்பறி கள்வன் தனியன் என்பதும், 'இடு' என்னும் ஏவலொருமையால் வழிச்செல்வோன் ஒன்றியென்பதும், 'இரவு' என்றதனால் கொடுங்கோல் அரசன் இரப்பது குடிகள் முறைப்படி செலுத்தவேண்டிய புரவுவரி யன்றென்பதும் பெறப்படும்.

553. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ னாடொறு நாடு கெடும்.