பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/107

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

98

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) நாள்தொறும் நரீடி முறைசெய்யா மன்னவன் - தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப முறை செய்யாத அரசன்; நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடிழப்பான்.

நாள்தொறும் நாடிழத்தலாவது,

"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் ... ... ... ... ... நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்து” (சிலப். 11:60-5)

வதால் வரவர வளங்குன்றுதலும், குடிகளின் அரசப்பற்றுக் குறைதலும், பகைவரால் அல்லது அருள்பூண்ட செங்கோலரசராற் சிறிது சிறிதாக நிலங் கைப்பற்றப் பெறுதலுமாம். நாடு அரசிற்கு உறுப்பாகலின், சினைவினை முதல்மேல் நின்றது.

"குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து, அதற்குத் தக முறைசெய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும் என்றவாறு” என்பது மணக்குடவருரை.

554. கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு.

(இ-ரை.) சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - தன் குடிகட்கு நன்மை யையும் தன் தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்.

வறட்சிக்காலத்து மக்கள் வானை ஆவலாக எதிர்நோக்குவது போல், கொடுங்கோலரசன் குடிகளும் செங்கோ லரசனொருவன் வரவை எதிர் பார்ப்பராதலின், அத்தகைய அரசன் அக் கொடுங்கோலனை எளிதில் வென்று அவன் நாட்டைக் கைப்பற்றுவன் என்பதாம். கூழ் என்றது தன் முன்னோருந் தானும் தேடிய பொருளை. குடியை இழப்பதனால், அவரிடத்தினின்று இனிப் பெறக்கூடிய பொருளைமட்டு மன்றி அவரை யாளும் ஆட்சியையே இழந்துவிடுபவனாவன்.

555. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.

(இ-ரை.) அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப் பொறுக்க முடியாது