பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/115

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

106

திருக்குறள்

தமிழ் மரபுரை



இனி, நீண்ட காலமாகத் தொகுக்கப்பெற்ற முன்னோர் செல்வம் எனினுமாம். ஏகாரம் பிரிநிலை. இதுகாறும் நாற்குறள்களால் குடிகளஞ்சும் வினைகளும் அவற்றின் தீய விளைவுகளும் கூறப்பட்டன.

567. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த னடுமுரண் டேய்க்கு மரம்.

(இ-ரை.) கடுமொழியும் கை இகந்த தண்டமும் - பொறுக்கத் தகாத கடுஞ்சொல்லும் குற்றத்தின் அளவிற்கு மிஞ்சிய தண்டனையும்; வேந்தன். அடுமுரண் தேய்க்கும் அரம் - அரசனது பகையை வெல்லுதற்கேற்ற வலிமையாகிய இரும்பைத் தேய்த்தழிக்கும் அரமாம்.

கடுஞ்சொல்லாலும் கரைகடந்த தண்டத்தாலும், குடிகளும் வினை செய்வாரும் அன்பு குன்றி அரசனது வலிமை சுருங்கி வருமாதலால், அவ் விரண்டையும் அரமாக வுருவகித்து, 'அடுமுரண்' எவ்வளவு வலியதாயினும் அழிந்துபோம் என்பதை, திண்ணிய இரும்பையும் அரம் தேய்த்துவிடும் என்னும் உவமையாற் பெறவைத்தார். கடுமொழியையுங் கையிகந்த தண்டத்தையும் ஈரரமாகவோ இருபுறமும் அராவும் ஓரரமாகவோ கொள்க. இக் குறளால் குடிகளும் வினைசெய்வாரும் அஞ்சும் வினைகள் கூறப்பட்டன. அடுமுரணை இரும்பாக வுருவகிக்காமையால் இதில் வந்துள்ளது ஒரு மருங்குருவகம்.

568. இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு.

(இ-ரை.) இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் - செய்ய வேண்டிய கருமத்தைப்பற்றி அமைச்சரொடு கலந்து எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச் சீறின் - அக் கருமந் தப்பியவழிச் சினத்தின் வயப்பட்டு அவர்மேற் சீறின்; திருச் சிறுகும் - அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கி வரும்.

அரசியல் வினையாற்றும் ஒப்புமையானும், உடன்கூட்டத்தைச் சுற்ற மென்னும் வழக்குண்மையானும், அமைச்சரை இனமென்றும்; தன் தவற்றை அவர்மே லேற்றிச் சீறின், அவர் நீங்கிய பின் அரசப் பொறையை உடன் தாங்குவாரின்றி அரசன் கெடுவான் என்பது நோக்கி, திருச் சிறுகும் என்றும் கூறினார். இதனால் வினைச்சுற்றம் அஞ்சுவதும் அதனால் விளையுங் கேடும் கூறப்பட்டன.