பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/125

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

116

திருக்குறள்

தமிழ் மரபுரை



கடுத்தல், அயிர்த்தல் என்பன பகைவன் அல்லது ஒற்றன் என்று ஐயுறுதல். கடாத (கடுக்காத) வடிவாவன: துறவியர், வணிகர், வழிப்போக்கர். இரப்போர் முதலியோர் தோற்றம். உகுத்தல் சிந்துதல், அது இங்கு மறை வெளியிடுதலைக் குறித்தது. 'கடா' கடு என்னும் வினையடிப் பிறந்த ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 'கடாஅ', 'உகாஅமை' இசைநிறை யளபெடைகள். ஏகாரம் தேற்றம் ஒற்று' வடிவால் அஃறிணையாதலின் அஃறிணை முடிவு கொண்டது.

586. துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று.

(இ-ரை.) துறந்தார் படிவத்தர் ஆகி - முற்றத் துறந்த முனிவரின் கோலம் பூண்டு; இறந்து ஆராய்ந்து - புகுதற்கரிய விடமெல்லாம் கோடிவரை உட்புகுந்து ஆராயவேண்டியவற்றை யெல்லாம் ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது - அங்குள்ளவர் அயிர்த்துப் பற்றி நுண்சிதைப்புச் (சித்திரவதை) செய்யினும் வாய் சோர்ந்து தம்மை வெளிப்படுத்தாதவரே; ஒற்று - சிறந்த ஒற்றராவர். 'துறந்தார்' என்பது ஒப்புமைபற்றித் திருநீராட்டுச் செலவினரையுங் குறிக்கும். 'என் செயினும்' என்றது நோவுறுத்தலின் கடுமையை விளக்கி நின்றது. பரிமேலழகர் 'துறந்தார் படிவத்தர்' என்பதை ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொள்ளாது உம்மைத்தொகையாகக் கொண்டு, 'முற்றத் துறந்தாராயும் விரதவொழுக்கினராயும்' என்று பொருள் கூறி, “இதனுட் 'படிவ' மென்றதனை வேடமாக்கித் துறந்தார் வேடத்தாராகி யென்றுரைப்பாரு முளர்" என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் ஆகிய நால்வரையும் பழிப்பர். ஒற்றர் துறவியரின் கோலத்தராகவன்றி உண்மையான துறவியராக இருக்க முடியாது; இருப்பின் ஒற்றராக முடியாது. பரிமேலழகர் "துறந்தாராயும் விரத வொழுக்கின ராயும்” என்று கூறியது பிராமணரை நோக்கிப் போலும்! 'துறந்தார் படிவத்த ராகி' என்று தொடங்கியதால், 'ஒற்று' என்பது பன்மை குறித்த வகுப்பொருமையாம். அது தன் அஃறிணை வடிவிற்கேற்ப அத் திணை முடிபு கொண்டது.

587. மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை யையப்பா டில்லதே யொற்று.

(இ-ரை.) மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களையும் அவர்க்கு உள்ளாளரைக் கேட்டறிய வல்லவனாகி; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - தான் கேட்டறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியும் ஆற்றலுள்ளவனே சிறந்த ஒற்றனாவன்.