பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/127

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

118

திருக்குறள்

தமிழ் மரபுரை



அரசன் ஒற்றரை ஒருவனை யொருவன் அறியாவாறு ஆண்டாலும், பகைவர் நாட்டில் இறந்தாராயவும் மறைந்தவை கேட்கவும் வல்லவரான ஒற்றர் தம் நாட்டு ஒற்றரை அரசனுக்குத் தெரியாமலே அறிந்துகொள்ளக் கூடுமாதலானும், அவருட் சிலர் தம்முள் இசைந்து ஒப்பக் கூறலாமாதலானும், எல்லாரையும் அரசன் நம்பாமலிருக்கவும் முடியாதாதலானும், மூவர்சொல் ஒத்துவந்தவழி நம்புக என்று வெளிப்படையாகவும், அங்ஙனம் வராவிடின் மேற்கொண்டு பிறர் வாயிலாக ஆராய்ந்து உண்மை காண்க வென்று குறிப்பாகவும், கூறினார். 'படும்' என்னும் துணைவினை ‘செய்யப் படும்’ (குறள். 335) என்பதிற்போல் வேண்டும் என்னும் பொருளதாம். இதனால் ஒற்றர் கூற்றுகளை ஆராயும்வகை கூறப்பட்டது.

590. சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற் புறப்படுத்தா னாகு மறை.

(இ-ரை.) ஒற்றின் கண் சிறப்பு அறியச் செய்யற்க - அறிதற்கரிய மறைபொருள்களை யறிந்துவந்து கூறிய ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை, அரசன் பிறரறியச் செய்யா தொழிக; செய்யின் மறை புறப்படுத்தான் ஆகும் - செய்தானாயின் தன் உள்ளத்திற் போற்றிக் காக்கவேண்டிய மருமச் செய்தியைத் தானே எல்லார்க்கும் வெளிப்படுத்தினவன் ஆவன்.

ஒற்றனுக்குப் பிறரறியச் சிறப்புச் செய்யின், இவன் யாரென்றும் அவன் சிறப்புப் பெறக் கரணியம் என்ன வென்றும் பிறரால் வினவி யறியப்படுதலின், 'புறப்படுத்தா னாகும் மறை' என்றார். மறையாவது அவன் ஒற்றன் என்பதும், அவன் ஒற்றியறிந்து கூறிய செய்தியுமாகும். அம் மறை வெளிப்படின், அதனாற் பயனின்றிப் போவதுடன் அவ் வொற்றனையும் அதன்பின் ஆளமுடியாதாம். இதனால் ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யும் வகை கூறப்பட்டது.

அதி.60-ஊக்கமுடைமை அதாவது, வினைசெய்வதில் தளர்ச்சியின்றி மேன்மேலுங் கிளர்ச்சி பெறுதல். ஒற்றரால் நிகழ்ந்தவற்றை யறிந்து அவற்றிற் கேற்ப வினைசெய்யும் அரசனுக்கு இது இன்றியமையாமையின், ஒற்றாடலின் பின் வைக்கப்பட்டது. ஊ - ஊங்கு = முன். ஊங்குதல் = முன்செல்லுதல். ஊக்குதல் = முற்செலுத்துதல், உள்ளத்தை வினையில் முன்செல்லத் தூண்டுதல். ஊங்கு - ஊக்கு - ஊக்கம்.