பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/128

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

119



591. உடைய ரெனப்படுவ தூக்கமஃதில்லா ருடைய துடையரோ மற்று.

(இ-ரை.) உடையர் எனப்படுவது ஊக்கம் - ஒருவரைச் செல்வமுடையார் என்று சொல்லச் சிறந்த கரணியமாயிருப்பது முயற்சி யுள்ளம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ - அம் முயற்சி யுள்ளம் இல்லாதார் வேறேதேனும் உடையராயினும் உடையராவரோ? ஆகார்.

வேறுடையது என்றது முதுசொம் எனப்படும் முன்னோர் தேட்டை. காக்கும் ஆற்றலின்மையால் அதையும் இழப்பர் என்பதாம். எச்சவும்மை தொக்கது.

592. உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

(இ-ரை.) உள்ளம் உடைமை உடைமை - முயற்சியுள்ள முடைமையே ஒருவனுக்கு நிலையான உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றப் பொருளுடைமை எவ்வளவு பெரிதேனும் தன்னிடம் நில்லாது நிங்கிவிடும்.

ஊக்கத்தினாற் புதுச்செல்வம் உண்டாக்கப்படுவதுடன் பழஞ் செல்வமும் பாதுகாக்கப்படும். "குந்தித் தின்றாற் குன்றுங் குன்றும்." ஊக்கம் உள்ளப் பண்பாதலின் அதை ஒருவரும் கவரமுடியாது. செல்வம் இயற்கையினாலும் செயற்கையினாலும் பல்வேறு வகையில் அழிந்து போம். ஆதலால் உண்மையான வுடைமை ஊக்கமே என்பதாம். 'உள்ளம்' ஆகுபெயர் அன்று. அது ஊக்கம் என்பதன் ஒருபொருள் மறுசொல். உள் - உய் - உயல் - உயற்று - உஞற்று = முயற்சி. ஒ. நோ: முயல் - முயற்று. உள்ளுதல் முன்தள்ளுதல். உள் - உள்ளம். மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல் உள்ளிருப்பது என்று பொருள்படுதலால் அது வேறாம்.

593. ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க மொருவந்தங் கைத்துடை யார்.

(இ-ரை.) ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார் - ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர்; ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - தம் செல்வத்தை யிழந்தாராயினும் அதை யிழந்தேம் என்று துன்புறார்.