பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/129

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

120

திருக்குறள்

தமிழ் மரபுரை



ஊக்கத்தினால் வேறு பொருள் புதிதாகத் தேடிக்கொள்ளலா மாதலின், ‘அல்லாவார்' என்றார். ஒருவந்தம் நிலைபேறு. அது இங்கு நிலைபேறாக என்று பொருள்படுதலாற் குறிப்பு வினையெச்சம். பெயரெச்சமாயின் ஒரு வந்தக் கைத்து என ஈறுகெட்டுப் புணர்ந்திருக்கும். கையிலுள்ள பொருள் கைத்து. கையது - கைத்து (கை+து). ஆக்கத்தை உண்டாக்குவது ஆக்கம்; ஆகுபெயர். ஆதல் வளர்தல், மேம்படுதல், ஆ - ஆகு - ஆக்கம். செல்வம் நிலையான கைத்தன்மை,

“கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்” (நாலடி.16)

என்பதனால் அறியப்படும்.

594. ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா வூக்க முடையா னுழை.

(இ-ரை.) ஆக்கம் - செல்வம்; அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - தளர்வில்லாத ஊக்கமுள்ளவனிடத்திற்கு; அதர் வினாய்ச் செல்லும் - தானாகவே வழி வினவிக்கொண்டு செல்லும்.

ஊக்க முள்ளவனுக்கு ஆக்கம் எளிதாய்க் கிட்டும் என்பது கருத்து. அசைவின்மை இடுக்கண், மெய்வருத்தம் முதலியவற்றால் தளராமை. இந் நான்கு குறளாலும், இருக்கின்ற செல்வத்தினும் அதற்கு ஏதுவான ஊக்கம் சிறந்ததென்பது கூறப்பட்டது.

595. வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்த முள்ளத் தனைய துயர்வு.

(இ-ரை.) மலர் நீட்டம் வெள்ளத்து அனைய - நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவாகும்; உயர்வு மாந்தர்தம் உள்ளத்து அனையது - அதுபோல மாந்தரின் வாழ்வுயர்ச்சி அவருடைய ஊக்கத்தின் அளவாகும்.

உயர்வு அரசர்க்கு நாடு பொருள் படைகளும் பிறர்க்குச் செல்வம் பதவி வினைஞரும் மிகுதலாம். சில மலர்க் காம்புகள் நீர்மட்டத்திற்கு மேலும் நிற்றலால், நீரளவாய் நிற்பனவே இங்கு உவமையாவன என அறிக. 'மலர்’ ஆகுபொருளது. நீரை வெள்ளம் என்பது மலையாள நாட்டு வழக்காதலால், திருவள்ளுவர் பண்டைச் சேரநாட்டொடு பழகியிருந்தமை உய்த்துணரப்படும். இதை,