பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/130

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

121



"இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ யற்று" (குறள்.943)

என்னும் உவமும் வலியுறுத்தும். இக் குறளில் வந்துள்ள அணி எடுத்துக் காட்டுவமை.

596. உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

(இ-ரை.) உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சிபற்றிய கருத்தாகவே யிருக்க; மற்று - பின்பு; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ் வுயர்ச்சி ஊழ்வலியால் தவறினும் தவறாத தன்மையதே.

உயர்வு தவறினும், உள்ளினவரின் உயரிய நோக்கத்தையும் அவர் செய்த பெருமுயற்சியையும் அறிவுடையோர் பாராட்டுவராதலானும்,

“தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” (குறள்.920)

ஆதலானும், 'தள்ளாமை நீர்த்து' என்றார். உம்மை தள்ளுவதன் அருமை குறித்து நின்றது.

597. சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு.

(இ-ரை.) களிறு புதை அம்பின் பட்டுப் பாடு ஊன்றும் - போர்யானை தன் உடம்பில் ஆழப் பதிந்த அம்பினாற் புண்பட்டவிடத்துந் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர்.

உவமமும் பொருளுங் கொண்ட அடைகள் இரண்டிற்கும் பொதுவாதலின், ஒல்காமை களிற்றுடனும் பாடூன்றுதல் உரவோருடனுஞ் சென்றியைந்தன. தாம் மேற்கொண்ட வினைக்குத் தடையாகப் பேரிடுக்கண் நேரினும், தளராது தாம் கருதியதை முடிப்பது என்பது, உவமத்தாற் பெறப்படும். முந்தின குறள் ஊழால் தடைப்படும் வினையையும், இக் குறள் இடை யூற்றால் தடைப்பட்டு விடாமுயற்சியால் வெல்லப்படும் வினையையும், குறித்தன வென வேறுபாடறிக.