பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/131

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

122

திருக்குறள்

தமிழ் மரபுரை



598. உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய மென்னுஞ் செருக்கு.

(இ-ரை.) உள்ளம் இலாதவர் - ஊக்கமில்லாத அரசரும் பெருஞ்செல்வரும்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ் வுலகத்தில் யாமே வண்மையுடையேம் என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம் பெறார்.

ஊக்கமில்லாதவர்க்கு அதனாலுண்டாகும் முயற்சியும், முயற்சியாலுண்டாகும் பொருளும், பொருளாலுண்டாகும் கொடையும், கொடையாலுண்டாகும் செருக்கும் இல்லையாதலின், வள்ளியம் என்னும் பெருமிதம் பெறார் என்பதாம். நல்லதுந் தீயதுமான இருவகைச் செருக்குள், இங்குக் குறித்தது நல்லது என அறிக.

"கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே" (மெய்ப். 6)

என்பது தொல்காப்பியம்.

599. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்.

(இ-ரை.) யானை பரியது கூர்ங்கோட்டது ஆயினும் - யானை விலங்குக ளெல்லாவற்றுள்ளும் உருவத்திற் பெரியதும், அதோடு கூரிய கொம்புள்ளது மாயினும்; புலி தாக்குறின் வெருவும் - உருவப் பருமையுங் கொம்புமில்லாத புலி தன்னைத் தாக்கின், அஞ்சி எதிர்க்காது அதனாற் கொல்லப்படும்.

பருத்தவுடம்பு வலிமிகுதி குறிக்கும். யானை மெய்வலிமை மிக்கதும் குத்தும் உறுப்புடையதுமா யிருந்தும், ஊக்கமின்மையால், அதனையுடைய சிற்றுடம்பு மோழைத்தலைப் புலியாற் கொல்லப்படும் என்பது, ஊக்கமில்லாத அரசர் படைப்பெருமையுங் கருவிச்சிறப்பும் உடையவராயினும், அவை குன்றியிருந்தும் ஊக்கஞ் சிறந்த சிற்றரசரால் வெல்லப்படுவர் என்பதை உணர்த்துதலால், இது பிறிதுமொழிதல் அணியாம். உம்மை உயர்வுசிறப்பு. 'வெரூஉம்' இசைநிறை யளபெடை.

600. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு.

(இ-ரை.) ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே; அஃது இலார் மரம் - அவ் வூக்கமிகுதி யில்லாதார்