பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/133

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

124

திருக்குறள்

தமிழ் மரபுரை



கோயில்களில் இரவும் பகலும் எரிவது எண்ணெய் விளக்கு. அதன் திரி அடிக்கடி தீண்டப்படுவதாயினும் அவியாது எப்போதும் எரிந்துகொண்டிருப்பதால், நந்தா விளக்கு எனப்படும். இதில் நந்துதல் கெடுதல் (அவிதல்).

'மாசூர' என்றதினால், இங்குக் குன்றா விளக்கம் என்றது நுந்தா விளக்கை. மாசு தூசி. தூளி - தூசி.

"நெரிந்தன மாசுண நெற்றியே (தக்கயாகப்.524)

தூசி மேற்புறம் முழுதும் படிந்துவிட்டால் மணி ஒளி தராது. மாசிலாமணி என்னும் வழக்கை நோக்குக: மாசு புறக்குற்றம்; மறு அகக்குற்றம்.

"மண்ணி அறிப மணிநலம்" (நான்மணி.3) "மண்ணுறு மணியின்" (புறம்.147)

குடி யென்றது இங்குச் சேரசோழ பாண்டியர் குடிகள் போலத் தொன்று தொட்டுத் தொடர்ந்து வந்து தன்னுட் பிறந்தவரை விளக்கும் தொல்வரவுக் குடும்பத்தை. இருளுக்கு ஒளியை மாய்க்கும் ஆற்றலின்மையின், 'இருளடர நந்திப்போம்' என்று பரிமேலழகர் கூறியது பொருந்தாது. இக் குறளில் வந்துள்ளது உருவகவணி.

உண்ணாழிகை என்பது தெய்வப் படிமையிருக்குங் கருவறை. கருப் பக்கிருகம் என்னும் வடசொல் வழக்கூன்றவே, இச் சொல் வழக்கு வீழ்ந்தது.

602. மடியை மடியா வொழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.

(இ-ரை.) குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேன்மேலுயரும் நற்குடியாகச் செய்தலை விரும்புபவர்; மடியை மடியா ஒழுகல் - முயற்சியின்மையில் முயற்சியின்மை கொண்டு ஒழுகுக.

வெளிப்படையுங் குறிப்புமான எதிர்மறையின் எதிர்மறை உடன் பாடாதல்பற்றி, இன்மையின் இன்மை வேண்டும். அல்லது வறுமையின் வறுமை வேண்டும் என்று சொல்வது போல், 'மடியை மடியாக வொழுகல்' என்றார். அது இடைவிடாது முயற்சி செய்க என்று பொருள்படுவதே. முயற்சியால் தாம் உயரவே., தம் குடியுயரும் என்பது கருத்து.

மணக்குடவர் 'மடியா' என்பதைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு, "மடிசெய்தலை மடித்தொழுக" என வுரைப்பர். அதுவும் பொருள் கெடாமையின் குற்றமன்றாம்.