பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/141

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

132

திருக்குறள்

தமிழ் மரபுரை



(இ-ரை.) முயற்சி திருவினை ஆக்கும் - விடாமுயற்சி செல்வத்தை உண்டாக்கவும் வளர்க்கவுஞ் செய்யும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அம் முயற்சியில்லாமை ஒருவனை வறுமைக்குட் செலுத்திவிடும்.

அரசனுக்குப் படைகுடி கூழமைச்சு நட்பரண்களும் நாடும் சிற்றரசும் செல்வமாகக் கருதப்பெறும். வறுமை அவற்றின் குறைவும் அரசிழப்புமாகும்.

617. மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான் றாளுளா டாமரையி னாள்.

(இ-ரை.) மாமுகடி மடி உளாள் - கரிய மூதேவி ஒருவனது சோம்பலின்கண் தங்குவாள்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் - திருமகள் தாளாளனின் முயற்சிக்கண் தங்குவாள்; என்ப - என்று சொல்லுவர் அறிந்தோர்.

கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னுஞ் சொற்குப் பாழ் என்னும் பொருளிருப்பதால், பாழான நிலைமை யுண்டுபண்ணுபவள் முகடி யென்றுமாம். அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத்தன்மையாலும், அவளுக்குக் கருமைநிறம் கொள்ளப்பட்டது. திருமகள் செந்தாமரை மலர்மேல் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுவதால், தாமரையினாள் எனப்பட்டாள். தாமரை யென்னும் செந்தாமரைப் பெயர் இன்று தன் சிறப்புப் பொருளிழந்து வழங்குகின்றது. வறுமையும் செல்வமும் அமைவதை, அணிவகைபற்றி, அவற்றிற்குரிய தெய்வங்கள் தங்குவதாகக் கூறினார். அக் கூற்றிலும் பண்பியின் நிலைமை பண்பின்மேல் ஏற்றப்பட்டது. முகடி சோம்பேறியின் மடியிலும், திருமகள் தாளாளனின் காலிலும் தங்குவர் என்று, வேறும் ஒரு போலிப்பொருள் தோன்றுமாறுஞ் செய்தார்.

618. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி.

(இ-ரை.) பொறி இன்மை யார்க்கும் பழி அன்று - மேன்மைக்கு ஏதுவாகிய ஊழின்மை ஒருவர்க்கும் குற்றமாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறிய வேண்டியவற்றை யறிந்து செய்ய வேண்டிய வினைகளை விடாமுயற்சியோடு செய்யாமையே குற்றமாவது.

அறியவேண்டுவன நால்வகை வலி, காலம், இடம் முதலியன. ஒருவன் முற்பிறப்பிற் செய்த வினை செய்தவனாலும் அறியப்படாமையாலும்,