பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/142

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

133



பெரும்பாலும் நல்லோர் வறிய நிலையிலும் தீயோர் செல்வ நிலையிலும் இருப்பதாலும், சில வினைகட்கு ஒரே முயற்சியும் சில வினைகட்குப் பல முயற்சியும் சில வினைகட்கு விடாமுயற்சியும் வேண்டியிருப்பதனாலும், ஊழ்பற்றியன்றி வினைபற்றியே மக்கட்குப் புகழும் பழியும் உண்டாம் என்பதாம்.

619. தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

(இ-ரை.) தெய்வத்தான் ஆகாது எனினும் - ஒருவன் எடுத்துக் கொண்ட முயற்சி தெய்வ ஏற்பாடாகிய ஊழ்வலியால் வெற்றிபெறாது போயினும்; முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் - அம் முயற்சிக்கு உடம்புபட்ட பாட்டின் அளவு பயன்தரும், தராமற் போகாது.

ஒரு முயற்சியை ஒருவன் தன் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்தும் வெற்றிபெறாது போயின், அன்று அது தெய்வத்தா னாகவில்லையென்று துணியப்படும். ஆயினும், அதுவரை அவன் பட்ட பாட்டிற்கேற்ற பயனை அடைந்தேயிருப்பான். முயற்சி வெற்றி பெற்றிருப்பதால், அம் மெய்வருத்தக் கூலியோடு பெரும்பயன் அடைந்திருப்பான். ஆதலால் எவ்வகையிலும் கேடில்லை. ஆகவே, விடாமுயற்சியைக் கைவிடக்கூடாது என்பது கருத்து.

620. ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித் தாழா துஞற்று பவர்.

(இ-ரை.) உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - தளர்ச்சியின்றித் தாழ்வற விடாது முயல்பவர்; ஊழையும் உப்பக்கங் காண்பர் - வெல்வதற்கரிய ஊழையும் வென்றுவிடுவர்.

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்" (குறள்.380)

என்று முன்னரே திட்டவட்டமாகச் சொல்லிவிட்டமையால் இங்கு 'ஊழையும் உப்பக்கங் காண்பர்' என்பது எதிர்மறையும்மை கொண்டதே; அல்லது ஊழென்று தவறாக மக்களாற் கருதப்பட்டதை வெல்வதே. இதனால், திருவள்ளுவர் முன்னுக்குப் பின் முரண்படக் கூறினாரென்று இம்மியுங்கருதற்க. முந்தின குறளையே சற்று வலியுறுத்தி விடாமுயற்சியாளரை ஊக்கினதாகவே கொள்க.