பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/143

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

134

திருக்குறள்

தமிழ் மரபுரை



உப்பக்கம் பின்பக்கம் அல்லது முதுகு. உப்பக்கங் காணுதல் புறங் காணுதல், அதாவது வெல்லுதல். தாழ்வறுதலாவது சூழ்ச்சியிலும் வலிமுதலியன வறிதலிலும் வினைசெய்வதிலுங் குற்றங் குறையின்மை. பல முறை தவறியபின் ஒரு வினையில் வெற்றி பெறுவதும் உயிரொடுக்கியிருந்தவர் இடுகாட்டிற் புதைக்கும்போது உட்செலுத்திய மருந்தால் மீண்டும் எழுந்து இயங்குவதும், தவறாகக் கணிக்கப்பட்ட பிறப்பியத்தில் (சாதகத்தில்) குறித்த காலங் கடந்து ஒருவர் வாழ்வதும், விடாமுயற்சியின் விளையும் அறியாமையின் நீக்கமுமேயன்றி ஊழை வென்றதாகா. ஊழை ஒருவரும் வெல்ல முடியாது. வெல்லப்படுவது ஊழாகாது. "பணத்தைக் கண்டாற் பிணமும் வாயைத் திறக்கும்" என்னும் பழமொழி பணத்தின் பெருமையை உணர்த்துவது போன்றே, 'ஊழையும்...உஞற்றுபவர்" என்னுங் குறளும் விடாமுயற்சியின் வலிமையை உணர்த்துகின்றதென அறிக. ஈரிடத்தும் உம்மை எதிர்மறை யென்றும் அறிக.

'சாத்தன் வருதற்கு முரியன்' என்பது 'வராமைக்கும் உரியன்' என்று பொருள்படுவது போன்றே. 'சாத்தன்' வராமைக்கும் உரியன்' என்பது 'வருதற்கும் உரியன்' என்று பொருள்படுவதால், இவ் விரண்டும் எச்சவும்மைகளேயன்றி எதிர்மறையும்மையும் உடன்பாட்டும்மையும் என்றாகா. 'பிணமும் வாயைத் திறக்கும்', 'ஊழையும் உப்பக்கங் காண்பர்' என மேற் காட்டியனவே உண்மையான எதிர்மறையென வுணர்க. இவை எச்சப் பொருளை அடிப்படையாகக் கொண்டனவேனும், பிணம் வாயைத் திறக்காது, ஊழை உப்பக்கங் காண முடியாது, என்னும் குறிப்பின வாதலால்,

“பாஅல்புளிப்பினும் பகல்இருளினும்” (புறம்.2)

என்பவைபோல எதிர்மறை யும்மையாம்.

"எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின” (தொல்.எச்.36)

என்றது ஏகார வோகாரங்கட்கேயன்றி உம்மைக்கன்று.

ஊழ் என்பதும் தெய்வ ஏற்பாடு என்பதும் ஒன்றேயாதலின், மாந்தன் முன்பு தவறு செய்த பின்பு திருத்திக்கொள்வது போல் இயற்கையான முற்றறிவுள்ள இறைவனுஞ் செய்யானென்றும், அவன் அங்ஙனஞ் செய்ததாகக் கூறுவதெல்லாம் மாந்தன் கட்டுக்கதையும் தற்குறிப்பேற்றமுமே யென்றும், அறிந்துகொள்க.

“அன்றெழுதினவன் அழித்தெழுதான்"

என்னும் பழமொழியும்,