பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/144

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

135



"உறற்பால நீக்கல் உறுவர்க்கு மாகா பெறற்பா லனையவும் அன்னவாய் மாரி வறப்பிற் றருவாரு மில்லை யதனைச் சிறப்பிற் றணிப்பாரு மில்" (514)

என்னும் நாலடிச் செய்யுளும் இங்கு நோக்கத்தக்கன.

அதி.63-இடுக்கணழியாமை அதாவது, ஆள்வினையில் ஈடுபட்டவன், இயற்கையாலேனும் தெய்வத்தாலேனும் இருவகைப் பகைவராலேனும் வினைக்கு இடையூறாகத் துன்பங்கள் நேர்ந்தவிடத்து, அவற்றால் மனங்கலங்காமை. அதிகார முறையும் இதனால் விளக்கும்.


621. இடுக்கண் வருங்கா னகுக வதனை யடுத்தூர்வ தஃதொப்ப தில்.

(இ-ரை.) இடுக்கண் வருங்கால் நகுக - ஒருவன் வினையாற்றும் போது இடையில் தடைபோலத் துன்பம் வரின் அதற்கு வருந்தாது அதை எள்ளி நகையாடுக; அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் - அதனை மேன்மேல் நெருங்கி மேற்கொள்வதற்கு அதுபோன்ற வழி வேறொன்று மில்லை;

வினை வெற்றிக்கு அஞ்சாமையொடு கூடிய மனவுறுதி இன்றியமை யாததாதலின், எதிர்த்து வரும் பகைவனை எள்ளி நகையாடுவது போன்றே வினைக்கு இடையூறாக வரும் துன்பத்தையும் பொருட்படுத்தற்க என்பார் 'நகுக' என்றார். அதனால் முயற்சிக்குத் தடையின்மையால், வினை வெற்றியாக முடியும் என்பதாம். அடுத்தூர்தல் என்பது, ஓர் அடங்காக் குதிரையை நெருங்கி யேறி யடக்குதல் போல்வதாம்.

622. வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா னுள்ளத்தி னுள்ளக் கெடும்.

(இ-ரை.) வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போல் ஏராளமாக வந்த துன்பங்களெல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் அவற்றால் ஒன்று மில்லையென்று தன் மனத்தில் நினைத்தமட்டில் நீங்கிவிடும்.