பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/65

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56

திருக்குறள்

தமிழ் மரபுரை



தக்கவழியால் முயலுவதாவது, இன்சொல்லை நேர்மையாளன், ஆண்மையில்லாதவன், முதுகிழவன், உலக வுவர்ப்புற்றோன் முதலியோரிடத்தும் பொருட்கொடையைப் பொருளாசைக்காரனிடத்தும், மகட்கொடையைக் காமுகனிடத்தும், பிரிப்பைத் தன்னொடு பொருந்தாதவனிடத்தும், தண்டித்தலைக் கயவனான எளியவனிடத்தும் பயன்படுத்துதல். பொத்துப்படுதல் துளைவிழுதல் அல்லது ஓட்டையாதல். அது இங்கு அணிவகைப்பொருளிற் கருமக்கேட்டைக் குறித்தது. வருந்திச் செய்யும் முயற்சி வருத்தம் எனப்பட்டது தொழிலாகுபெயர்.

இனி, வலிய படைக்கலங்களும் தகுந்த தலைவனும் நல் வானிலையும் (weather) நிலநலமும் உணவு நிறைவும், அவ்வப்போது இடமும் வினையும் மாறும் பயிற்சியும் போர்வலக்காரமும் இன்றிக் குருட்டுத்தனமாக மிகப் பாடுபட்டுப் போர்செய்யும் படை எவ்வளவு பெரிதாயினும், வெற்றியின்றி மடியும் என்றுமாம்.

469. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.

(இ-ரை.) அவர் அவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் சிறப்புக் குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற் கேற்பச் செய்யாவிடின்; நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு - வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத்தும் குற்றமுண்டாம்.

இன்சொல்லுங் கொடையும், ஏதும் வருத்தத்திற்கும் இழப்பிற்கும் இடமின்றி, எல்லார்க்கும் ஏற்றதும் இன்பந்தருவதுமா யிருத்தலின், நல்லாம்புடைகளாம். அவற்றை அவரவர் பண்பறிந் தாற்றாமையாவது, அவற்றிற்கு உரியா ரல்லாதாரிடத்துக் கையாளுதல். 'தவறு' அவ் வினை முடியாமை அல்லது முடிந்தும் பயனின்மை.

470. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு.

(இ-ரை.) தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் தம் வினை செய்தற்கண், தம் நிலைமையொடு பொருந்தாத ஆம்புடைகளை வேற்றரசரிடத்துக் கையாளுவாராயின், உயர்ந்தோர் அவற்றை நல்லன வென்று ஒப்புக் கொள்ளார்; எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆதலால், அவ் வுயர்ந்தோர் இழிவென்று கருதாதவற்றை எண்ணியறிந்து செய்தல் வேண்டும்.