பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

திருக்குறள்

தமிழ் மரபுரை



485. காலங் கருதி யிருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.

(இ-ரை.) ஞாலம் கருதுபவர் - உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர், கலங்காது - மனக்கலக்கமின்றி; காலம் கருதி இருப்பர் - தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர்.

'கலங்காது' என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும். நட்பாக்கல், பகையாக்கல், பிரித்தல், கூட்டல், மேற்செல்லல், இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள், இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை. "காலஞ் செய்வது ஞாலஞ் செய்யாது" என்பராதலின், 'காலங் கருதி யிருப்பர்' என்றார்.

486. ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து.

(இ-ரை.) ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுந்த அரசன் ஊக்க முள்ளவனாயினும் பகைமேற் செல்லாது காலம் பார்த்து ஒடுங்கியிருக்கின்ற இருப்பு; பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - சண்டையிடும் செம்மறிக்கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குதற்குப் பின்வாங்கும் தன்மையது.

ஒடுக்கம் சோம்பலால் ஏற்பட்டதன் றென்பதற்கு 'ஊக்க முடையான்' என்றார். ஒடுக்கத்தின் தேவையும் சிறப்பும் தகர் பின்வாங்குதல் என்னும் உவமையால் விளங்கும்.

487. பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.

(இ-ரை.) ஒள்ளியவர் - தெளிந்த அறிவுடைய அரசர்; ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டினவுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார்; காலம் பார்த்து உள்வேர்ப்பர் - அவரை வெல்லுதற்கேற்ற காலம் வரும்வரை தம் சினத்தை உள்ளே அடக்கிவைப்பர்.