பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஒரு குயில் கூவுகிறது, என்னும் வாக்கியத்தில் 'ஒரு' என்பது எழுவாய்க்கு அடையாய் வந்தது. இதை எழுவாயடை (Enlargement or Attribute) என்னலாம்.

குயில் இனிதாகக் கூவுகிறது, என்னும் வாக்கியத்தில், னிதாக' என்பது பயனிலைக்கு அடையாக வந்தது. இதைப் பயனிலையடை (Extension or Adverbial Qualification) என்னலாம்.

ஒரு குயில் இனிதாகக் கூவுகிறது, என்னும் வாக்கியத்தில், எழுவாயும் பயனிலையும் அடையடுத்துவந்தன.

சில வாக்கியங்களில், பயனிலையின் பொருள் அதை யடுத்து வரும் வேறொரு சொல்லால் அல்லது சொற்றொடரால் நிரம்பும். அதை நிரப்பியம் (Complement) என்னலாம்.

எ-டு : தம்பி பெரியவனானான்.

இதில், 'தம்பி' எழுவாய்; 'ஆனான்' பயனிலை; 'பெரியவன் நிரப்பியம்.

பெரியவன் என்னும் சொல்லின்றி, ஆனான் என்னும் வினை, பொருள் நிரம்பாமை காண்க.

இந்த மரம் ஆறு மாதத்தில் பெரிதாய்விட்டது.

இவ் வாக்கியத்தில், 'இந்த' எழுவாயடை; ‘ஆறு மாதத்தில்' பயனிலையடை; 'பெரிது' நிரப்பியம்.

சில கூட்டுச்சொற்களில், துணைவினை பயனிலை போன்றும் அதனொடு சேர்ந்த சொல் நிரப்பியம் துணைபோலும் தோன்றும். அவையிரண்டும் சேர்ந்தே ஒரு சொல்லாகும். ஆதலால், அத்தகைய சொற்களைப் பிரித்தல் கூடாது.

எ-டு : உரையாடு, குடியிரு, கொண்டுவா, செய்யமுடியும்.

இவற்றில், ஆடு ஆடு இரு வா முடியும் என்னும் சொற்கள் துணைவினைகள். இவை, உரையாடு குடியிரு முதலிய கூட்டுச் சொற்களின் உறுப்புகள். ஆதலால், இவற்றைப் பிரித்தல் கூடாது.

செயப்படுபொருள்

குன்றாவினைகள் பயனிலையாக வரும்போது செயப்படுபொருள் (Object) தொக்கோ வெளிப் பட்டோ வரும் என்பது முன்னர்க் கூறப்பட்டது.

சாத்தன் உண்டான், என்னும் வாக்கியத்தில் செயப்படு பொருள் தொக்கும்;

சாத்தான் சோற்றை உண்டான், என்னும் வாக்கியத்தில் அது வெளிப்பட்டும் வந்தது.