பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

(13) ஓக நூல்

135

ஓவுதல் - ஒத்தல், ஒன்றுதல். ஓவு - ஓகு. ஓவு -ஓவம் -ஓகம் = அறிவன் உளத்தில் இறைவனோடு ஒன்றும் ஊழ்கம் (தியானம்).

உகம் என்பது வடமொழியில் யுக என்றும் உத்தி என்பது புக்தி என்றும் ஆயதுபோல், ஓகம் என்பதும் அம்மொழியில் யோக என்றாகும். இம்முறை பற்றி ஓகு என்பது யோகு எனப்படும்.

ஓகப் பயிற்சி எண்ணுறுப்புகளை யுடையது. அவை ஒழுக்கம் (இயமம்), ஒழுங்கு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), புலனடக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒடுக்கம்(சமாதி) என்பன. இவற்றுள் இருக்கையும் வளிநிலையும் உடற் பயிற்சி; ஏனைய உளப் பயிற்சி.

பிறப்பால் தம்மை உயர்வாகக் கருதும் பேதைமையும் செருக்கு முள்ளோர், ஓகப்பயிற்சி செய்வது முயற்கொம்பாம். இடைகலை, பின்கலை, சுழிமுனை என்பன வளிநிலைத் தொடர்பான நாடிகளைக் குறிக்கும் தென் சொற்கள். இவற்றை இடாகலா, பிங்கலா, ஸூஷூமுனா எனத் திரிந் துள்ளனர் வடமொழியாளர்.

ஓக நூலிற் கூறப்படும் அறுநிலைக்களங்கள் அல்லது நரப்புப் பின்னல்கள் அடிமுதல் முடிவரை, முறையே, அண்டி குறியிடை நாலிதழ்த் தாமரை வடிவிலும், அண்டி கொப்பூழிடை ஆறிதழ்த் தாமரை வடிவிலும், கொப்பூழ் மண்டலத்தில் பத்திதழ்த் தாமரை வடிவிலும், நெஞ்சாங்குலை மண்டலத்தில் பன்னீரிதழ்த் தாமரை வடிவிலும், அடிநா மண்டலத்தில் பதினாறிதழ்த் தாமரை வடிவிலும், இரு புருவத்திடை ஈரிதழ்த் தாமரை வடிவிலும், இருப்பதாகச் சொல்லப் பெறும்.

ஓகநூல் இறந்து பட்டதால் அறுநிலைக்கள (ஷடாதார)ப் பெயர்களும் இறந்துபட்டன. இருக்கைகளின் பெயர்களும் வடமொழியிற் பலவாறு திரிக்கப்பட்டும் மொழி பெயர்க்கப்பட்டும் உள. ஆஸனம் என்னும் சொல்லே தென் சொல்லின் திரிபென்பது, என் 'வடமொழி வரலா’ற்றில் விளக்கப் பெறும்.

14) மாயம் (Conjury)

இது மாலம் அல்லது கண் கட்டு.

(15)வசியம் (Enchantment)

இது மகளிரையும் பிறரையும் மருந்தாலும் மந்திரத்தாலும் மனப் பயிற்சியாலும் வயப்படுத்தல்.