பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

பழந்தமிழாட்சி மூவேந்த வேளான் முதலிய பட்டங்களும். சிற்றரசர்க் களித்த பிள்ளை மக்கள் நாயனார் என்னும் பட்டங்களும் பெயர்க் கொடையாகும். இனி, அரசர் தம் குடிப்பெயர்களை அமைச்சர் படைத்தலைவர் முதலியோர்க்கும், தம் சிறப்புப் பெயர்களைச் சிற்றரசர்க்கும் பட்டப்பெயராகவும் பெயரடையாகவும் இடுவது முண்டு. சேரன் செங்குட்டுவனின் படைத்தலைவன் வில்லவன் கோதை என்றும், அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சரான மாணிக்கவாசகர் தென்னவன் பிரமராயன் என்றும், மூன்றாங் குலோத்துங்கச் சோழனின் சிற்றரசருள் ஒருவன் குலோத்துங்கச் சோழப் பிருதிகங்கன் என்றும் பெயர் பெற்றிருந்தமை காண்க.

அரசியல் வினைஞர், பொருநர் (போர் மறவர்), பொது நல வூழியர், புலவர், கலைஞர், வணிகர், மறையோர், அறச்சாலை, மடம், கோயில் முதலியோர்க்கு அளித்த நிலம் நிலக்கொடையாகும். அது முற்றூட்டு, இறையிலி, இறைநிலம், நிலவிறை ஆகிய நால்வகை நிலைமையிலும்; நிலம் ஊர் நாடு என்னும் மூவகையளவிலும் கொடுக்கப்பட்டது. ஒருவகை வரியு மில்லாதது முற்றூட்டு. அது உறாவரை, காசு கொள்ளா விறையிலி எனவும்படும். அரசிறை மட்டும் நீங்கியது இறையிலி இறையிறுக்கும் நிலம் இறைநிலம். நிலத்தில் வரும் இறையைமட்டும் நுகர்வது நிலவிறை.

அரசியல் வினைஞர்க்கு, அக்காலத்தில் சம்பளம் உம்பளம் என்னும் இருவகையில் வேலைப்பயன் அளிக்கப்பட்டது. நெல்லாக வேனும் காசாகவேனும் கொடுப்பது சம்பளம்; நிலமாகக் கொடுப்பது உம்பளம். உம்பளம் மானியம் எனப்படும். அது நிலையானது; பெரும்பாலும் இறையிலியா யிருப்பது.

மானியவகை: அரசியல் வினைஞருள், ஊர்த்தலைவனுக்குக் கொடுப்பது அம்பலமானியம்; ஊர்க்கணக்கனுக்குக் கொடுப்பது கணக்கக்காணி; வெட்டியானுக்குக் கொடுப்பது வெட்டிப்பேறு.

அரசியல் வினைஞருள் ஒருசாராரான பொருநருள்,

படைத்தலை வனுக்குக் கொடுப்பது அமரநாயகம்; போரிற் பட்டவன் மகனுக்கு அல்லது மனைவிக்குக் கொடுப்பது இரத்தக்காணி (இரத்தக் காணிக்கை, இரத்த மானியம், உதிரப்பட்டி).

பொதுநலவூழியருள், குடிமக்கட்குக் கொடுப்பது குடிமக்கள்

மானியம்; பறையடிப்பவனுக்குக் கொடுப்பது பறைத்துடைவை; உவச்சனுக்குக் கொடுப்பது உவச்சக்காணி; மருத்துவனுக்குக் கொடுப்பது மருத்துவப் பேறு; நச்சு மருத்துவனுக்குக் கொடுப்பது விடகர (விஷஹர) போகம்; ஏரியுடைப்பை அடைத்தவனுக்குக் கொடுப்பது ஏரிப்பட்டி, இவையெல்லாவற்றிற்கும் பொதுப்பெயர்