பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேற்றரசன் வினாக்கட் கெல்லாம் விடையிறுக்கும் அறிவாற்றலும் உரிமையும் பெற்றவர் வகுத்துரைப்பார்; அவ் வாற்றலின்றிச் சொல்லி விடுத்த செ-தியைமட்டுஞ் சொல்பவர் வழியுரைப்பார்.

பிரித்தல் பொருத்தல் பேணல் முதலிய சூழ்ச்சிவன்மையும், அவற்றிற்கேற்ற சொல்வன்மையும் உடைய அமைச்சர்க்கும். அவர் போன்ற பிறருக்கும், தூதுரைத்தல் பொதுவினையாதலின், இது அமைச்சர்க்குரிய வினைசெயல் வகையின் பின் வைக்கப்பட்டது.

காதல் வாழ்க்கையில், தலைவனுந் தலைவியும் ஒருவர்க்கொருவர் தூது விடுப்பது, இன்பத்துப்பாற்கன்றிப் பொருட்பாற்குரிய தன்றென அறிக.

681. அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

(இ-ரை.) அன்பு உடைமை - மக்களிடத்து அன்பாயிருத்தலும்; ஆன்ற குடிப்பிறத்தல் - ஆட்சித் தொழிற்கேனும் அமைச்சுத் தொழிற்கேனும் ஆசிரியத் தொழிற்கேனும் ஏற்ற வகுப்பிலும் குடும்பத்திலும் பிறந்திருத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை - அரசர் விரும்பத்தக்க சிறந்த தன்மைகளுடையனா யிருத்தலும்; தூது உரைப்பான் பண்பு - தூது சொல்வானுக்கு உரிய இலக்கணங்களாம்.

நாட்டிற்கு நன்மையை நாடவேண்டுமாதலின் அன்புடைமை' யென்றும், குலத்தொழிலறிவு கல்லாமற் பாதியமையுமாதலின் 'ஆன்ற குடிப்பிறத்தல்' என்றும், அரசருள்ளத்தைக் கவருந் தன்மைகளுடையவன் கூறும் தூதை அவர் விரும்பிக் கேட்பராதலின் 'வேந்தவாம் பண்புடைமை' என்றும் கூறினார். குடியென்றது இங்குத் தொல்வரவான அரசர் குடும்பத்தையும் சேக்கிழார் குடிபோலும் வேளாண் சரவடியையுமாம். அவாவும் என்பது அவாம் எனக் குறைந்து நின்றது. இக் குறளால் இருவகைத் தூதர்க்கும் பொது விலக்கணம் கூறப்பட்டது.

682. அன்பறி வாராந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று.

(இ-ரை.) அன்பு - தம் அரசனிடத்து அன்புடைமையும்; அறிவு - தம் வினைக்கு அறிய வேண்டியவற்றை அறிந்திருத்தலும்; ஆரா-ந்த சொல் வன்மை - செவிக்கும் உள்ளத்திற்கும் இனியனவும் பொருட்கொழுமை யுள்ளனவும் தகுந்தனவுமான சொற்களை ஆரா-ந்தமைத்துக் கூறும்