பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருந்தாது, குறிப்பு எல்லார்க்கும் ஒத்து நிகழாமையின். நாடு, ஊர், ஆறு, மலை, யானை, குதிரை, தேர், முரசு, மாலை, கொடி என்பன அரசரின் பத்துறுப்புகள் (திவா. பிங்)

704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
யுறுப்போ ரனையரால் வேறு.

(இ-ரை.) குறித்தது கூறாமைக் கொள்வாரோடு - ஒருவர் தம் மனத்திற் கருதியதை அவர் கூறாமலே அறியவல்லவரோடு; ஏனை உறுப்பு ஓர் அனையர் - மற்றவர் உறுப்பான் ஒருதன்மையராக ஒப்பாரேனும்; வேறு - மதித்திறனாலும் அறிவாலும் வேறுபட்டவராவர்.

எனினும் (ஏனும்) என்பது அவா-நிலையால் வந்தது. ஆறாம் அறிவில்லாத மாக்கள் நிலையினர் என்னும் கருத்தால் 'வேறு' என்றார். 'ஆல்' அசைநிலை.

705. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண்.

(இ-ரை.) குறிப்பின் குறிப்பு உணராவாயின் - பிறர் முகத்திலும் முக வுறுப்புகளிலுமுள்ள குறிப்புகளைக் கண்டும் அவற்றால் அவர் உள்ளக் குறிப்புகளைக் காணமாட்டாதனவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ ஒவ்வொரு புலனுக்கும் ஒவ்வொன்றாகவுள்ள ஐம்புல வுறுப்புகளுள், காட்சியையே தம் புலனாக கொண்ட கண்கள் வேறென்ன பயன் படுவனவாம்?

'குறிப்பு' இரண்டனுள், முன்னது தோற்றமாகிய புறக்குறிப்பு; பின்னது கருத்தாகிய அகக்குறிப்பு. இரண்டும் தொழிலாகுபெயர். குறிப்பறிதற்கு இன்றியமையாத கருவியாதல்பற்றி, அறிவான் உணர்வு அவன் கண்ணாகிய உறுப்பின்மேல் ஏற்றப்பட்டது. என்ன பயத்தவோ என்னும் வினா, ஒரு பயனுமில்லை யென்னும் விடையை வேண்டி நின்றது. இவ் விரு குறளாலும் குறிப்பறியமாட்டாரது இழிவு கூறப்பட்டது.

706. அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம்.