நின்றாற் போதும்; தன் வா-திறந்து ஒன்றுஞ் சொல்ல வேண்டுவதில்லை. அவர் தாமாகச் செ-தியை அறிந்துகொள்வார்.
2. அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின் - குறை வேண்டுவான், தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் உற்ற குறையை யுணர்ந்து அதைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும் அவர் தன் முகம் நோக்கும் எல்லையில் தானும் அவர் முகம் நோக்கி நின்றாற் போதும்.
இது பரிமேலழகருரையைத் தழுவியது. இவ் வதிகாரம் அரசரைச் சார்ந்து ஒழுகுபவர் அவர் குறிப்பறிதலைப்பற்றிய தாதலாலும், குறையுறு வான் செ-தி 'இரவு' அதிகாரத்திற்கே ஏற்றதாதலானும், இப் பொருட்கு 'உணர் வார்' என்னுஞ் சொற்கு வழிநிலை வினைப்பொருள் கொள்ள வேண்டியிருப் பதனாலும், இவ் வுரை முன்னதுபோற் சிறந்ததன்றாம்.
இம் மூன்று குறளாலும் குறிப்பறிதற்கு முகங் கருவியென்பது கூறப்பட்டது.
709. பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்.
(இ-ரை.) கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் - அரசரின் பார்வை வேறுபாடுகளை அறியவல்ல அமைச்சரைப் பெற்றால்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் - அவ் வரசர்க்குப் பிறரோடுள்ள பகைமை யையும் நட்பையும் அவர் கண்களே தெரிவிக்கும்.
பார்வை வேறுபாடுகள் எண்சுவையொடு சமந்தமும் (சாந்தமும்) சேர்ந்த தொண்சுவை (நவரசம்) பற்றியன; பகைமைபற்றிய சினநோக்கு கண் சிவப்பாலும், நட்புப்பற்றிய மகிழ்நோக்கு கட்பொலிவாலும் அறியப்படும். 'கண்' இரண்டுட் பின்னது ஆகுபெயர்.
710. நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற.
(இ-ரை.) நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் - யாம் நுண்ணறி வுடையேம் என்று தம்மைக் கருதும் அமைச்சர் அரசரின் கருத்தை அளக் குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை - ஆராயுமிடத்து அவ் வரசர் கண்ணன்றி வேறில்லை.