பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/97

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆசிரியர் இதை நட்பும் பகையும் என்றும், அவைபோன்ற குணங்களும் செயல்களும் நிலைமைகளும் என்றும் இரண்டாக வகுத்துக்கொண்டு. வெளிப்படையாகவுள்ள முன்னதை ஐயதிகாரங்களாலும் குறிப்பாகவுள்ள பின்னதைப் பன்னீரதிகாரங்களாலுங் கூறுகின்றார்.

வெளிப்படையான முற்பகுதியில் முதலதிகாரமான நட்பு என்பது இவ்வதிகாரம்.

781. செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

(இ-ரை.) நட்பின் செயற்கு அரிய யா உள - நட்பைப்போல அமைத்துக்கொள்வதற்கு அரிய உறவுகள் வேறு எவை உள்ளன? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - அதை அமைத்துக் கொண்டால், எடுத் துக்கொண்ட வினைமுயற்சிக்குப் பகைவரால் கேடுவராமற் காத்தற்கு அதைப்போல் அருமையான காவல்கள் வேறு எவை உள்ளன?

நாகரிக நிலையிலேனும் அநாகரிக நிலையிலேனும் ஒருவன் பிற ருறவின்றி வாழ்தல் அரிது. அவ் வுறவு இயற்கை, செயற்கை என இருதிறப் படும். இயற்கையுறவு அரத்தக் கலப்பாலான இனவுறவு; செயற்கையுறவு மணவுறவு, தொழிலுறவு, தத்துறவு, உதவிப்பேற்றுறவு, பழக்கவுறவு, நட்புறவு எனப் பலவகைப்படும். அவற்றுள், நட்புறவென்பது உண்மையானதாகவும் வலிமையுள்ளதாகவும் வா-த்துவிடின், இனவுறவினுஞ் சிறந்ததாகும். அத்தகைய உறவைத் தேடிக் கண்டுபிடிப்பதும் பெறுவதும் பேணிக் கொள்வதும் அரிதாதலால், 'செயற்கரிய யாவுள நட்பின்' என்றார். உண்மை யான நண்பர் துன்பக்காலத்தில் உயிரையும் உதவிக் காப்பராதலின், அது போல் 'வினைக்கரிய யாவுள காப்பு' என்றார்.

"A father is a treasure, a brother comfort, but a friend is both" என்னும் ஆங்கிலப் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது. இருவகை யுறவும் தனிப்பட்ட மாந்தர்க்குப் போன்றே, அரசுகட்கும் இன்றியமையாதனவாம். இயற்கையுறவு 'சுற்றந்தழால்' (53) என்னும் அதிகாரத்திற் கூறப்பட்டது. செயற்கையுறவாகிய நட்பு இவ்வதிகாரத்திற் கூறப்படுகின்றது.

காலத்திற்கேற்பக் கட்சிமாறும் துணைவலி தொழில்பற்றிய கூட்டுறவே யன்றி நட்பன்மையானும், அத் துணைவலியும் 'வலியறிதல்' (48) என்னும் அதிகாரத்தின் முதற்குறளில் பெயரளவிலேயே குறிக்கப்பட்டிருத்தலானும்,