பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

தமிழர் திருமணம் முன்னமும், தமிழர்க்கு இசைத்தமிழ் இருந்த தென்பதையும், ஐயரவர்கள் தமிழ் நாட்டிற் பிறந்ததினாலேயே அவர்கட்கு இசையறிவு அமைந்த தென்பதையும், இந்திய இன்னிசைக்கு இசைத்தமிழே மூலமென்பதையும், தெலுங்கு தமிழின் கிளைமொழியே என்பதையும் அவர் அறிவாராக.

3. இன நலம் பொறாமை அல்லது தன்னினப் பகைமை

உறவின் முறையாலோ குலத்தாலோ மதத்தாலோ நாட்டாலோ தமக்கினமாயினார், நன்றாய் வாழ்ந்தாலும், ஒரு நல்ல பதவியைப் பெற்றாலும், அதைப் பொறாது புழுங்கி அவரைக் கெடுத்துவிட்டு, அயலாரையோ மாற்றாரையோ அவருக்குப் பதிலாய் அமர்த்துவது, இன்றும் தமிழருக்கு வழக்கமாயிருக்கின்றது. இது அவரது நலத்தைக் கொல்லும் நச்சுக் காய்ச்சல்; வலிமையை அறுத்தெறியும் கூர்வாள்.

தமிழரசர்களான சேர சோழ பாண்டியர் மூவரும் ஒற்றுமையா யிருந்த வரையில் அவர்க்கும் தமிழ்நாட்டிற்கும் கேடில்லை. அவர் ஒருவர்மீதொருவர் பொறாமைகொண்டு, தமக்குள்ளேயே போர் செய்யத் தொடங்கியபின், அவரது வலிமை குன்றியது. அருமையான வேலைப்பாடுள்ள பண்டை மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் இருந்த இடமும் தெரியாமல் இடிக்கப்பட்டுப் போயின. முத்தமிழரசரும் மறைந்தனர். அவரது அரசியன் மொழியாகிய செந்தமிழும் வரவர மங்கி வருகின்றது. ஓர் அரசன் இன்னோர் அரசனை வென்றபின், அவனது தலை நகரையும் நாட்டையும் எரியூட்டுவதும், அரண்மனையையும் கோட்டையையும் இடித்துவிட்டுக் கழுதையேர் பூட்டிக் கவடி விதைப்பதும் அக்கால வழக்கம்.

தமிழரசர் வலிகுன்றிய பின்னரே, பல்லவர், தெலுங்கர் மராட்டியர் முதலிய வடநாட்டாரும், துருக்கர், ஆங்கிலர், பிரஞ்சுக்காரர் முதலிய மேல்நாட்டாரும், முறையே தமிழ்நாட்டிற் படையெடுத்து அதைக் கைப்பற்றவும், தமிழர் அடிமையரும் வறியருமாகவும் நேர்ந்தது.

இப்போது, தமிழர்க்குள், ஒவ்வொரு தொழிலாளர்க்குள்ளும் பொறாமை யிருந்துவருகின்றது. புலவன் புலவனையும், மருத்துவன் மருத்துவனையும், அமைச்சன் அமைச்சனையும் பகைக்கிறான். ஒரே குலத்திலும் ஒரே மதத்திலும் ஒருவன் இன்னொருவனைப் பகைக்கிறான். இது தமிழ்நாட்டில் அயலார் ஆதிக்கம் கொள்வதற்கே ஏதுவாயிருக்கிறது.

பண்டைக்காலத்திலேயே திருவள்ளுவர்மீது பொறாமை கொண்டு, அவரது திருக்குறளை முதலாவது போற்றா திருந்திருக்கின்றனர் புலவர்.

இக் காலத்தில், அரசியற் கட்சியிலும் பொறாமைப்பேய் புகுந்து அலைக் கழிக்கின்றது. ஒரு தமிழன் தன் இனத்தானைப் பகைத்தானானால், அப்பகையைக் காட்டுவதற்கு உடனே தமிழர்க்குக் கேடு செய்யும் ஓர் அரசியற் கட்சியில் சேர்ந்துகொண்டு யானை கொழுத்துத் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போலத் தன் குலத்தை அல்லது நாட்டைத் தானே கெடுத்துக்கொள்ளுகிறான்.