பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர் வழுக்கள்

25

உருவு), உலகம், ஐயன், கட்டை, கடகம், கணக்கு, கணி, கம்பு (கம்பம்), கலகம், கலுழன், கலை, காகம், காமம், காலம், குடில் (குடிசை), குடும்பு (குடும்பம்), குண்டம், குமரன் (குமரி), குலம், சமம், சமயம், சாமை, சாயுங்காலம் (சாயுந்தரம்), சாயை, சாலை, சிப்பி (இப்பி), சிவன், சீர்த்தி, சுக்கு, சும, சுரம், திறம், தூண், தூணி, தூது, தூள், தெய்வம், தோணி, நகர் (நகரி, நகரம்,நாக ரிகம்), நாகம், நாடி, நாவாய், நாழி, நாழிகை, நானா, நிலையம், நேயம், பக்கம், பஞ்சி, பட்டம், பட்டயம், பட்டை, படி (படிமம், படிமை, படிவு, படிவம், வடிவு, வடிவம்), பதிகம், பள்ளி, பல்லி, பாண்டியன், பார்ப்பான், புடல்(புடலை), பிழா, பெட்டி, பெட்டகம், பேழை, புரி, மண்டகம் (மண்டபம்), மதுரை, மந்திரம், மனம், மாதம், மாயை, மாலை, மானம், மீன் (மீனம்), முகிழ் (முகை, மொக்குள்), முத்து (முத்தம்), முரசு, முனி (முனிவன்,முனை, முனைவன்), மெது, வட்டம், வடவை, வடை, வண்ணம், வணிகம், வரி, வலம், வால், விடி, வேட்டி முதலிய நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள், தமிழ் வடமொழியின் கிளையென்று அயலாரும் ஆராய்ச்சியில்லா தாரும் கருதும் வண்ணம் வடசொற்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றுள், ஆயிரம், ஐயன், காலம், குடும்பு, பெட்டி, முகம், வாய், முதலியவை தமிழுக்கு அடிப்படையானவை. ஆசிரியன், சமயம், சிவன், நகர், நாவாய், மந்திரம், வணிகம், முதலியவை தமிழ் நாகரிகச் சான்றாய் நிற்பவை. பாண்டியன், மதுரை, குமரன், குமரி முதலிய சொற்களை வடசொல்லெனக் கூறுவதால், தமிழர் தலைக்கழகக் காலத்திலேயே ஆரியத் தொடர்புகொண்டு விட்டனரென்றும்; ஆசிரியன், ஐயன், கலை, சிவன், பார்ப்பான், மந்திரம், முனிவன்

முதலியவற்றை அங்ஙனங் கூறுவதால், தமிழர் ஆரியரால்

நாகரிகப்படுத்தப்பட்டனரென்றும்; அம்பு, ஆசிரியம், உவமை, உருபு, தரங்கம், வண்ணம் முதலியவற்றை அங்ஙனங் கூறுவதால் தொல்காப்பியம் அல்லது தமிழிலக்கணம் வடமொழியிலக்கண வழியதென்றும்; சில ஆரியவழியினரும் கொண்டான்மாருங் காட்ட முயல்கின்றனர்.

இனி, ஒருசில பேராசிரியர் தமக்கென ஆராய்ச்சியின்றி மேலை மொழி நூலாசிரியர் எழுதியவற்றை மட்டும் படித்துக்கொண்டு, சில பழந்தமிழ்ச் செய்யுட்களையோ நூற்பாக்களையோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பட்டம் பெற்ற துணையானே, தாமும் மொழிநூ லதிகாரிகளெனத் தருக்கி, ஆராய்ச்சியின் பெயரால் வடசொற்களை யெல்லாம் தென்சொற்களென்று நான் கூறிவருகின்றேன் என்று குழறிவருவதாகக் கேள்வி. இதற்கு அறியாமையும் அழுக்காறும் தன்னலமும் தமிழ்ப்பற்றின்மையுமே காரணம்.

ஆய்விலா தாரும் அறிவுடையார் ஆய்ந்தார்முன் வாய்திறவா துள்ள விடத்து.

மேலை மொழிநூல் வல்லார் வேதத்திலும் தமிழ்ச்சொல் கண்டு வெளி யிடும்போது, கீழைத்தமிழ்ப் பேராசிரியர் தூய தென்சொல்லையும் வடசொல்லனத் துணிவது எத்துணைக் கேடானது!